உணவு ஒவ்வாமை காரணமாக நானுஓயா கிளாசோ தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (28.04.2023) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
எந்தவொரு மாணவருக்கும் ஆபத்தான நிலையில்லையெனவும், பெரும்பாலான மாணவர்கள் இன்று (28.04.2023) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கிளாசோ தமிழ் வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 5வரை 126 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
இவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகின்றது. பாடசாலை நிர்வாகத்தாலேயே சமையல் பணி முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்று (28) மாணவர்களுக்கு கடலை வழங்கப்பட்டுள்ளது.
அதனை உட்கொண்ட மாணவர்களுக்கு திடீரென வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போக்கு, மயக்கம் என்பன ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து உணவருந்தியவர்களில் சுமார் 31 மாணவர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
105 மாணவர்களுக்கு பாடசாலையில் இன்று (28.04.2023) உணவு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, பரிசோதனைக்காக நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸாரும், நுவரெலியா பொது சுகாதார பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.