உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்ற போதிலும் அது தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இந்த நாட்டில் உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது மிகவும் உணர்வுபூர்வமான விடயம், எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் வங்கி மற்றும் நிதி கட்டமைப்பிற்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படாத வகையில் மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு உகந்த மிகவும் சிறந்த மறுசீரமைப்பிற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரு வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவுக்கும் போதே ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் திட்டம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால், நாட்டின் முக்கியமான பிரச்சினைகளில் அரசாங்கம் எப்போதும் பொறுப்புடன் செயல்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பாராளுமன்றத்தில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டார். மத்திய வங்கியும் நிதி அமைச்சும் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளன. குறிப்பாக நம் நாட்டின் வங்கிக்கட்டமைப்பு, நிதிக்கட்டமைப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாத மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிக்க அவசியமான மறுசீரமைப்பிற்கு உகந்த தீர்வுகளை அனைவரும் தேடுகின்றனர். இது தொடர்பாக, நாடு முழுவதும் பல்வேறு தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

இது குறித்து அரசாங்கம் இறுதித் தீர்மானம் எடுத்தவுடன், பாராளுமன்றத்துக்கும் பொதுமக்களுக்கும் அறிவிக்கத் தயாராக உள்ளது. இது மிகவும் உணர்வுபூர்வமான விடயம். இது சந்தை நிலைமையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, இந்த மறுசீரமைப்பு தொடர்பாக சந்தேகங்களை எழுப்பும் அறிக்கைகளை வெளியிடாமல் இருந்தால் தான் , நமது நிதிச் சந்தையின் ஸ்திரத்தன்மையை நாம் தொடர்ந்து பராமரிக்க முடியும். அதற்கு நாம் அனைவரும் மிகவும் பொறுப்புடன் செயற்படுவது முக்கியம். இந்த விடயங்கள் அனைத்தையும் பற்றி, ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயத்தின் பின்னர் குறிப்பாக வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சிறந்த புரிதல் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *