பாரளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் சீனன்குடா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தியாகி திலீபனின் 36 வருட நினைவேந்தலை முன்னிட்டு திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியொன்று வாகனப் பேரணி பொத்துவிலில் இருந்து அவர் உயிர்நீத்த இடமான யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

இந்நிலையில் நேற்று மூதூர், சேனையூர், தம்பலகாமம் பகுதிகள் ஊடாக திருகோணமலை நகரத்தை நோக்கி, குறித்த வாகனப் பேரணி பயணித்துக் கொண்டிருந்தபோது சர்தாபுரம் பகுதியில்  சிங்கள இனவாத கோஷ்டியால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இதில் பாரளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பல தரப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களை இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் போராட்டம்

திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும் பாராளுமன்ற உறுப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினை கண்டித்து முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இனவெறித் தாக்குதலின் நேரடி சாட்சியம்.

கணபதிப்பிள்ளை குககுமாரராஜா
தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ளார்.

தியாக தீபம் திலீபண்ணாவின் மூன்றாம் நாள் ஊர்வலத்தில் திருகோணமலை கப்பல் துறையில் இனவெறி பிடித்த சிங்கள காடையர்களின் கொலை வெறித்தாக்குதலினை கண்ணால் கண்ட சாட்சியம்.
எங்களது தியாகி திலீபண்ணாவின் மூன்றாம் நாள் ஊர்தி நிகழ்வானது 2023.09.17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மாவட்ட தோப்பூர் கட்டபறிச்சானில் காலை 8.00 மணியளவில் ஆரம்பித்து எங்களது தமிழ் கிராமங்கள் ஊடாகவே ஊர்தி பயனித்தது. எங்களது ஊர்திக்கு முன்னாலும் பின்னாலும் சிங்கள புலனாய்வுத் துறையினர் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

நாங்கள் தம்பலகாமம் தாண்டி கப்பல் துறையை அடையும் போது எல்லாப் பக்கமும் இருந்து சிங்கள காடையர்களால் கற்கள் எங்களுக்கு வீசப்பட்டு சரகாபுரம் சந்தியில் வைத்து 60 இற்கும் மேற்பட்ட சிங்கள புலனாய
வுக் காடையர்களால் எங்களது தியாக தீபம் திலீபண்ணாவின் ஊர்தியும் இரண்டு கார்களும் நிறுத்தப்பட்டதுடன் ஊர்தி மற்றும் கார்கள் உடைத்து நாசமாக்கப்பட்டது.அதே நேரத்தில் ஊர்தி மற்றும் கார்களில் இருந்த கௌரவ பாரளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஏனைய உணர்வாளர்களையும் கொலை வெறியோடு மூர்க்கத்தனமாக தாக்கினர் நாங்கள் உயிர் பிளைக்க வேண்டும் என்ற ஓரே எண்ணத்தில் நாங்கள் பின்வாங்கிச் சென்றோம். மேலும் நடந்த இத்தாக்குதல் இலங்கை புலனாய்வுத்துறை மற்றும் பொலிசின் ஆதரவுடனேயே நடந்தது என்பதை கண்முன்னே காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறான கொலை வெறி பிடித்தவர்களை வைத்து சிறிலங்கா அரசு தமிழினம் மீது அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றது.இத்தாக்குதலானது என்னத்தை காட்டுகின்றதென்றால் ,தமிழர்கள் அமைதியாக, சுதந்திரமாக வாழமுடிதென்பதையும் முற்று முழுதாக தமிழர் தாயகம் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது இவ்வாறான சம்பவம் நடைபெறுவது எங்களது தமிழ் மக்களுக்கு இலங்கையில் பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகின்றது. அதுமட்டுமன்றி ஓர் பாராளுமன்ற உறுப்பினருக்கே இலங்கையில் பாதுகாப்பு இல்லை என்றால் தமிழ் மக்கள் எவ்வாறு இலங்கையில் வாழ்வது …. ?
இத்தாக்குதலானது சிறிலங்கா அரசினால் நன்கு திட்டமிடப்பட்டு, சிறிலங்கா அரசு புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டது என்பதை உறுதியாக கூறிக்கொள்வதோடு. உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர் அனைவரும் உரத்துக் குரல் கொடுப்பதுடன் சர்வதேச நாடுகளிடம் கொண்டு போய்ச்சேர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த இனவாத கொலைவெறித் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.
நன்றி

கணபதிப்பிள்ளை குககுமாரராஜா
தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர். என தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *