கனேடிய பாஸ்போர்ட் வைத்திருக்கும் அக்‌ஷய் குமார் குறித்து – நீண்ட நாள் சர்ச்சை

பிரபல இந்திய நடிகரான அக்‌ஷய் கனேடிய குடியுரிமை வைத்திருப்பது தொடர்பில் நீண்ட காலமாக சர்ச்சை நிலவிவந்தது. அவர் கனேடிய பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகும்.

இந்த விடயம் நீண்ட நாட்களாகவே சர்ச்சையை உருவாக்கிவந்த நிலையில், அது குறித்து கடந்த ஆகத்து மாதம் முதன்முறையாக மனம் திறந்தார் அக்‌ஷய்.

நான் இந்தியாவைச் சேர்ந்தவன், நான் ஒரு இந்தியன், எப்போதுமே இந்தியனாகத்தான் இருப்பேன் என்று கூறியிருந்தார் அக்‌ஷய்.

சில வருடங்களுக்கு முன், தன்னுடைய 14, 15 படங்கள் தோல்வியடைந்துவிட்டதாகத் தெரிவித்திருந்த அக்‌ஷய், அப்போது வேறு ஏதாவது ஒரு நாட்டுக்குச் சென்று வேலை பார்க்கவேண்டும் என்று எண்ணியதாகவும் கனடாவிலிருக்கும் தன்னுடைய நண்பர் ஒருவர் இந்தியாவில் உன்னால் வெற்றிபெறமுடியவில்லையானால் கனடாவுக்கு வந்துவிடு என்று கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

ஏராளம் பேர் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு வேலை செய்ய செல்கிறார்கள். ஆனாலும், அவர்கள் இன்னமும் இந்தியர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஆகவே, என் தலைவிதி எனக்கு இந்தியாவில் உதவி செய்யவில்லையானால், நான் வேறு ஏதாவதுதான் செய்யவேண்டும் என்று எண்ணியே நான் கனடாவுக்குச் சென்றேன்.

கனடாவுக்குச் சென்று குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன், கனேடிய குடியுரிமையும் கிடைத்தது என்று கூறிய அக்‌ஷய், ஆனால், அதற்குப் பிறகு தொழிலில் வெற்றியை அனுபவிக்கத் துவங்கியதாகவும் இந்தியாவிலேயே இருந்துவிடுவது என முடிவு செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது கனேடிய குடியுரிமையைத் துறந்துவிட்டதாக, நேற்று, முன்னாள் ட்விட்டர், இந்நாள் எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் அக்‌ஷய்.

கனேடிய குடியுரிமையைத் துறப்பதற்காக 2019இலேயே விண்ணப்பித்திருந்தாராம் அக்‌ஷய். ஆனால், கோவிட் காரணமாக அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவது தாமதமானதாம்.

தற்போது தனக்கு இந்தியக் குடியுரிமை கிடைத்துவிட்டதாகவும், தானும் இந்தியன்தான் என்றும் கூறியுள்ள அக்‌ஷய், மக்களுக்கு தனது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *