” நான் வாக்கு வேட்டைக்காக அரசியல் நடத்தவில்லை. கௌரவமானதொரு அரசியல் கலாசாரத்தையே விரும்புகின்றேன். தவறு செய்து வெல்வதைவிட, நல்லது செய்துவிட்டு தோற்றால்கூட அது நிம்மதிதான். எனவே, கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறிய வேண்டாம் என எதிரணியில் உள்ள சில உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (09) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியவை வருமாறு,
” எனது அமைச்சு தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரால் நேற்று கேள்வியொன்று எழுப்பட்டிருந்தது. அவ்வேளையில் நான் சபையில் இருக்கவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசமைக்கமைய இடம்பெற்ற முக்கிய கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்தேன். நாட்டில் மின் கட்டணம் அதிகரித்துள்ள நிலையில் நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படாததால் மாதம் 425 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகின்றது. மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் இதனை செலவிடுகின்றோம். இவ்விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருடன் நேற்று கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
அந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பட்டுள்ளது. பதில்களை நாம் சபையில் சமர்ப்பித்திருந்தோம். அப்படி இருந்தும் துறைசார் அமைச்சர் ஏன் சபையில் இல்லை என கேள்வி எழுப்பட்டுள்ளதுடன், அரசியல் நாகரீகம் அற்ற வகையில் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு வேட்டைக்காக நான் அமைச்சு பதவியை ஏற்கவில்லை. நான் இந்த நாட்டை நேசிக்கும் ஒரு இளைஞன். நாட்டை முன்னோக்கி கொண்டுவரவே நாம் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். எனவே, பொறுப்பில்லை என கூறுவதை ஏற்க முடியாது.
நாட்டில் கொரோனா தொற்று, பொருளாதார நெருக்கடி காலங்களில் நாம் மக்களுடன் இருந்தோம். மாறாக காட்டுக்கு சென்று மிருகங்களை படம் பிடிக்கவில்லை.
எனவே, எல்லா விடயங்களையும் அரசியலாக்குவது கீழ்த்தரமான செயற்பாடாகும்.
நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படும். சமூர்த்தி பயனாளிகள், நலன்புரி உதவிகளை பெறுபவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அதிகமாக நீரைப் பயன்படுத்தும் 20 வீதமானவர்களுக்குதான் விலை உயர்வு தாக்கமாக அமையும்.
நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பதுளையில் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். மக்களும் பங்கேற்றிருந்தனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் அதில் பங்கேற்கவில்லை. மன்னிப்பு கோருமாறு வடிவேல் சுரேஷ் வலியுறுத்தினார். அந்த மன்னிப்பு இன்னும் கேட்கப்படவில்லை. ஆகவே கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிய முற்படக்கூடாது.
நல்லாட்சியில் வீடமைப்புதுறை அமைச்சராக சஜித் பிரேமதாசதான் பதவி வகித்தார். ஆனால் தோட்ட வீடுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொடுப்பதற்கு அவர் முன்வரவில்லை.
நல்லாட்சியில் கட்டப்பட்ட வீடுகளுக்குகூட நான்தான் உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொடுத்து வீட்டு திட்டத்தை முழுமைப்படுத்தினேன். தவறு செய்து வெல்வதற்கு பதிலாக சரியானதை செய்துவிட்டு தோல்வி அடைந்தால்கூட பரவாயில்லை.
அதேவேளை, அநாகரீகமான அரசியல் விமர்சனங்களை கைவிடுமாறு நான் கூறியிருந்தேன். ஆனால் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு முத்திரை வெளியிடுவது வெட்கக்கேடு எனக் கூறியுள்ளார்.
3 லட்சம் பேருக்கு முகவரி பெற்றுக்கொடுத்து, சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்த ஒருவரை இப்படி விமர்சிக்க கூடாது. கண்டியில் இடம்பெற்றுள்ள காணி மோசடியுடன் இவருக்கு தொடர்பு உள்ளது என்றார்.