(ஏறாவூர் சாதிக் அகமட்)

 

மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது வருட பாடசாலை தினத்தையொட்டி பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கடந்த 23.08.2023ம் திகதி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் தே.குகதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் கலந்து கொண்டார்.

ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான, ஏறாவூர் பொலிஸார் பொறுப்பதிகாரி, செங்கலடி பிரதேச சபைச்செயலாளர் மற்றும் பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலையின் பழைய மாணவர்களின் 22 அணிகள் கலந்து கொண்ட இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி பாடசாலை மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த 8ம் திகதி ஆரம்பமான 22 அணிகள் பங்கு கொண்ட போட்டிகள் தாவும் வார இறுதி நாட்களில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அணிக்கு 5 ஓவர் கொண்ட இறுதிப்போட்டியில் 2014, 2019ம் ஆண்டைய உயர்தர பழைய மாணவர் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய 2019ம் ஆண்டு உயர்தர அணி 5 ஓவர் முடிவில் 60 ஓட்டங்களைப்பெற்றனர். இதில் பிரவீன், தனுசிகன் ஜோடி 25 பந்துகளுக்கு முகங்கொடுத்து 48 ஓட்டங்களைப்பெற்றனர்.

61 என்ற ஓட்டத்தை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய 2014ம் ஆண்டு உயர்தர அணி போட்டியின் 5 ஓவர் முடிவில் 61 ஓட்டங்களைப்பெற்று 7 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டினர். இதில் துடுப்பெடுத்தாடிய பரணி, முகுந்தன் ஜேடி 57 ஓட்டங்களைப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

போட்டியில் தொடர் ஆட்டநாயகன் விருதை ஐங்கரன், ஆட்ட நாயகனுக்கான விருதை பரணி ஆகியோரும் பெற்றனர்.

இதே வேளை, போட்டியில் வெற்றியீட்டிய 1ம் 2ம் 3ம் அணிகளுக்கான வெற்றிக்கிண்ணங்களை அதிதிகள் வழங்கி வைத்தார்.

மேலும், சிறப்பு நிகழ்சியாக பழைய மாணவிகளுக்கான கயிறுழுத்தல் போட்டியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *