இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பாவனைக்காக ஜப்பான் அரசாங்கம் 150 மோட்டார் சைக்கிள்கள், 74 வேன்கள் மற்றும் சிறிய பஸ் வண்டிகள், 115 சோதனைக் கருவிகள் ஆகியவற்றை நன்கொடையளித்துள்ளது.
இவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டம் கையளிக்கும் அடையாள நிகழ்வு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
மேற்படி வாகனங்களை நன்கொடையளிப்பதுடன் தொடர்புடைய ஆவணங்களை ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டக்கே சுன்சூக்கி (Takei Shunsuke) ஜனாதிபதியிடம் கையளித்தார்.
வாகனங்களின் நிலைமைக் குறித்து கேட்டறிந்து கொண்ட ஜனாதிபதி, வெளிவிவகார இராஜாங்க அமைச்சரிடம் சுமுகமான பேச்சவார்த்தையிலும் ஈடுபட்டார்.
இலங்கை பொலிஸார் முன்னெடுத்து வரும் விசாரணைகளை எளிதாக்கும் வகையில் ஜப்பான் அரசாங்கம் இந்த நன்கொடைகளை வழங்கியுள்ளது.
இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் மிசுகோஷி ஹிதெகி உள்ளிட்ட ஜப்பான் பிரதிநிதிகள் குழு, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, சர்வதேச விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் பணிப்பாளர் தினுக் கொலம்பகே உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.