ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு , அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க  அறிவித்துள்ளார்.

டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தேவைக்கு ஏற்ப பிரதம செயலாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு பொலிஸாருக்கும் முப்படைக்கும் ஜனாதிபதியின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் 1896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அது 49% ஆகும்.

மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களில் 21% கம்பஹா மாவட்டத்திலும்,18% கொழும்பு மாவட்டத்திலும், 7% களுத்துறை மாவட்டத்திலும் பதிவாகியுள்ளது.அவற்றில் 3.4% டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் மாத்திரம் பதிவாகியுள்ளனர்.

இது தவிர, திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களில் இருந்தும் அதிகமான நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் மேல் மாகாணத்தில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டதுடன், டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகும் கம்பஹா போன்ற மாவட்டங்களில் துரித டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​டெங்கு வைர ஸின் 2 மற்றும் 3 ஆம் திரிபுகள் அதிகளவில் பதிவாகியுள்ளன.மேலும்14 வருடங்களின் பின்னர் டெங்கு வைரஸ் 3 ஆவது திரிபு பரவுகிறது. டெங்கு நோய்க்கான நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால், டெங்கு நோய் பரவும் வாய்ப்பும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் அதன் கீழ் உள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகங்கள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்கள் என்பன நோய் தடுப்புக்காக பொது சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையின் கீழ் விரிவான வேலைத்திட்டத்தை ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாக மாகாண பிரதம செயலாளர்கள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி,டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை அடையாளங் கண்டு துப்புரவு செய்யும் பணிகள் தொடர்பில் அரசு நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் தலைவர்களை அறிவூட்டுதல், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கடைகளை பரிசோதனைக்குட்படுத்துதல் , ஒலிபெருக்கி மூலம் அறிவூட்டுதல், டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்ட பகுதிகளின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு பரவும் நுளம்பு குடம்பிகளை அழித்தல், வீடுகள் மற்றும் நிறுவனங்களை அண்டிய பகுதிகளை சுத்தமாக வைத்திருக்காதவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்தல் என்பன மூலம் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாகாண பிரதம செயலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனிடையே டெங்கு ஒழிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு சுகாதாரத் துறைகளின் தலையீடு மட்டும் போதாது என்றும், அதற்கு பொது மக்களின் ஆதரவும் தேவை என்றும் சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *