தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளையும், பரிந்துரைகளையும் வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த முன்னெடுப்புக்கள் அர்த்தபூர்வமானவையாக அமைய வேண்டுமாயின் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக விரைவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் அமுல்ப்படுத்தல் தொடர்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்ப்பாக நேற்று(16.08.2023) ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளிலேயே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றின் சில முறையற்ற செயற்பாடுகள் தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் இருப்பதாக குறித்த ஆவணத்தில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், தொல்லியல் ஆய்வு செயற்பாடுகள் அந்தந்த மாவட்டத்தினை சேர்ந்த வரலாற்றுத்துறை நிபுணர்களின் பங்குபற்றுதல் மற்றும் கலந்தாலோசனைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டுமே தவிர, தொல்லியல் திணைக்களத்தின் கொழும்பு அலுவலகத்தில் இருக்கின்ற உயர் அதிகாரிகள் சிலரின் விருப்பு வெறுப்பு சார்ந்த முன்னெடுப்புக்களாக அமைவதை அனுமதிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறாளை முருகன் ஆலயம், கீரிமலை தீர்த்தக் குளம் மற்றும் பருத்தித்துறை இறங்கு துறை போன்ற பகுதிகளை, தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தி அண்மையில் வர்த்தமானி வெளியிடப்பட்ள்ளமை தொடர்பாக குறித்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், துறைசார் நிபுணர்கள், சம்மந்தப்பட்ட பிரதேசத்தினை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் போன்ற யாருடைய கருத்துக்களும் உள்வாங்கப்படாமல் கொழும்பு அதிகாரிகளினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானில் உள்ளடக்கப்பட்டுள்ள பறாளை முருகன் ஆலயம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள காரணங்கள் தவறானவை என்பதை வரலாற்றுத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று, வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடுகள் சிலவும், தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு மாறாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இவ்வாறான விடயங்கள் தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், முன்னெடுக்கப்படுக்கின்ற எவ்வகையான முயற்சிகளும் வெற்றியளிக்காது எனவும் தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்த உதவாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைளை நிறைவேற்ற முடியும் என்ற ஈ.பி.டி.பி.கட்சியின் நீண்ட கால நிலைப்பாடு குறித்த ஆவணத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கு சாத்தியமான 3 கட்டப் பொறிமுறைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு:- கடற்றொழில் அமைச்சர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *