இருளப்பன் ஜெகநாதன்
சுயாதீன ஊடகவியலாளர்
அண்மையில் பௌத்த பிக்குகள் 13 ஆம் அரசியல் திருத்தத்துக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். மற்றுமொரு புறம் தமிழர் பூர்வீக நிலங்களில் விகாரைகள் அமைக்கும் செயல்பாடுகள் தீவிரம் பெற்று வருகின்றன.
இராவணன் தமிழன் இல்லை என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கௌதம புத்தரே சிங்களவர் அல்ல என்ற உண்மையை மறந்து விட்டு இதுபோன்ற வரலாற்று உண்மைகளை திரிவு படுத்தி பேசுகின்ற சிறுபிள்ளை அரசியல் உரைகள் பாராளுமன்றில் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
ஜே ஆர் ஜவாயவர்தன கற்று தந்த பாடத்தை ரணில் உட்பட இலங்கையின் அனைத்து பேரின வாத அரசியல் வாதிகளும் தாரக மந்திரமாய் பின்பற்றி வருகின்றமை நன்கு புலப்படுகிறது.
இம்முறை இனத்துவேசம் பேசுகின்ற எவரும் நாம் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல – எம்மையும் தமிழர்களையும் மோத விட்டு அரசியல் நடத்தும் ரணில் ராஜபக்ஷ அரசுக்கு எதிரான போராட்டம் என்று தங்கள் போராட்டத்தை நியப்படுத்துகின்றமை அவதானிக்க தக்கது.
தேசிய மக்கள் முன்னணி (TNPF) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் இல்லத்தை பௌத்த பிக்குமார் முற்றுகை இட்டு அவருக்கெதிராக கடும் இனவாத வெறுப்பை கொட்டி தீர்த்தனர். இலங்கை அரசியல் இனவாத மற்றும் பௌத்தவாத மேகங்களால் மெல்ல மெல்ல மீண்டும் சூழ தொடங்கியுள்ளது. அவை அடைய மழையாய் பெய்து அதுமற்றுமொறு கருப்பு ஜூலையை உருவாக்கிடும் அபாயம் தென்படுகிறது.
இது குறித்து இந்தியாவின் ரோ புலனாய்வு பிரிவும் இலங்கையின் என் ஐ பி தேசிய புலனாய்வுப்பிரிவும் எதிர்வு கூறியுள்ளது. இவை திட்டமிடப்பட்டவையா ! அல்லது எதேச்சையானவையா என்பதை எவராலும் யூகிக்க முடியாதுள்ளது.
இலங்கையில் எப்போதெல்லாம் அதிகார பகிர்வும் 13 ஆம் திருத்தமும் – பேசும் பொருளாகிறது அப்போதெல்லாம் இது போன்ற இனவாத எழுச்சிகள் உயிர் பெறுவது வரலாற்றில் முதல் தடவை இல்லை.
எனினும் 13 ஆம் திருத்த சட்டம் என்பது அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒரு அம்சம் ஆகும் – சர்வ இறைமை பொருந்திய நாடாக இலங்கை திகழ்வதையும் அதனை ஆட்சி செய்வதற்குரிய ஆணையை முன்னெடுப்பதற்குரிய அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட – அரசியல் அமைப்பின் குறித்த ஒரு அம்சத்தை தீக்கிரையாக்குவது அனைத்து இறைமையும் கொண்ட தேசத்தின் கௌரவத்தை இழிவு படுத்துவதாகும்.
அது சட்ட விரோதமும் தேச துரோகமும் ஆகும். எனினும் இலங்கை வரலாற்றில் பௌத்த பிக்குமார்கள் அனைத்திற்கும் மேலானவர்கள் எனும் எழுதப்படாத சட்டத்தை இன்றுவரை அவர்களின் எல்லையற்ற ஜனநாயக விரோத செயல்களை குறித்து ஆட்சி செய்யும் அரசின் மிதமான போக்குகள் எடுத்து காட்டுகின்றன.
காவிகளின் அத்துமீறல்கள் அடாவடித்தனங்கள் அனைத்தையும் இனத்தை காப்பதற்கான – தேசிய போராட்டம் என்று அடையாளப்படுத்தும் எல்லையற்ற சுதந்திரம் தடை இன்றி வழங்கப்பட்டு வருகின்றமை – இலங்கை தேசத்தின் சாபக்கேடாகும்.
பௌத்த மதம் அரசின் மதமாகவும் அவை பேணி காக்கப்பட வேண்டும் என்ற குறித்த ஒரு மதத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ள மதச்சார்புள்ள அரசியல் அமைப்பே காவிகளின் அடாவடித்தனத்துக்கு உரம் ஊட்டும் விஷ செடியாகியுள்ளது.
இலங்கையின் 75 வது சுதந்திர தின உரையின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரிக்கப்படாத இலங்கையில் மாகாணங்களுக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்வைக் காண்பதில் உறுதியாக இருப்பதாகவும், வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் தனித்துவமான பிரச்சினைகள் தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
“காணி, கைதிகளை விடுவித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம். மேலும், ஒற்றையாட்சியில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், இந்த தேசத்தை பிரிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம்,” என்றார்.
இந்து இலங்கை உடன்படிக்கையின் மூலம் 1987 இல் 13 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டு மாகாண சபைகள் முறை உருவாக்க வழிவகுத்தது.
இனங்களுக்கிடையே ஆன நீண்ட கால நல்லிணக்கத்திற்காக தமிழ் பிராந்தியங்களுக்கு அதிகாரப் பகிர்வை அடுத்தடுத்து வந்த இந்திய அரசுகள் 13வது திருத்தத்தை அமல்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்த போதிலும் அது இதுவரையில் முழுமையாய் நடைமுறை படுத்தப்படவில்லை.
மேலும் இந்தியாவின் மாநிலங்களுக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்களோடு ஒப்பிடும் போது 13வது திருத்தமானது இந்திய மாநிலத்தில் உள்ள மாவட்ட அபிவிருத்தி சபையின் அதிகாரங்கள் அளவில் மாகாண சபைகளுக்குக் வழங்கவில்லை.
2021ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) அமர்வில் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு இலங்கையை இந்தியா வலியுறுத்தியிருந்ததுடன், கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி, இலங்கைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக, நல்லிணக்க செயல்முறையை தொடர்வதற்கு இலங்கை அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி இருந்தார்.
30.08.2023 நேற்று மல்வத்தை அஸ்கிரிய உட்பட அனைத்து மக நாயக்க தேரர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து வடக்கு கிழக்கில் உருவாகிவரும் இனங்களுக்கிடையிலான மத பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு மதத்தலைவர்கள் கொண்ட விசேட குழுவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியிருந்தார். மேலும் தேரவாத பௌத்த நாடுகள் எதுவும் முன்னேற்றம் காணவில்லை என்பதை ஜனாதிபதி சுட்டி காட்டியிருந்தார்.
அப்போது மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் அதிகரித்தால் பிரச்னை வரும் என்று அஸ்கிரிய அனுநாயக தேரர் அணைமடுவே தம்மதாச தேரர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கே தேரர்கள் கூட சிறுபான்மை மக்களுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட கூடாது என்ற நிலைப்பாட்டின் பிரதிபலிப்பாகும். எது எப்படி இருப்பினும் இலங்கை அரசியலில் பௌத்தவாதம் இனவாதம் என்பது அசைக்க முடியா ஒரு அரசியல் மூலதனமாக இருந்து வருகிறது. ஒரு புறம் தமிழர் பூர்வீக நிலங்களில் பௌத்த ஆதிக்கம் செலுத்த முற்படும் போது அதற்கெதிரான தார்மீக போராட்டத்தை முன்னெடுக்கும் தமிழர்களின் செயல்பாடுகள் இனவாத செயல்பாடாகவும் பௌத்தத்துவத்தின் மீது தமிழர்களால் கட்டவிழித்துவிடப்படும் இனவாத செயலாக தென்னிலங்கையில் சித்தரிக்கப்பட்ட செய்திகளை அரசியல் வாதிகளும் சில கட்சிகளும் அதற்கு துணை போகும் சமூக ஊடகங்களும் செய்து வருகின்றன.
தேசிய ஒருமைப்பாடு , சர்வதேச ராஜதந்திர உறவுகள் மற்றும் இலங்கையின் ஒரு பல்லின மக்கள் வாழுகின்ற நல்லாட்சி கொண்ட நாடு என்ற என்ற முகத்தை அவ்வப்போதுசர்வதேசத்துக்கு காண்பித்தாலும் உள்ளக அரசியல் என்று வரும் போது அனைத்து கட்சிகளும் இந்த இனவாத மூலதனத்தை கையிலெடுப்பது என்பது வரலாறு இவர்களுக்கு கற்றுத்தந்த பாடம். மதச்சார்பற்ற அரசியல் அமைப்பு ,ஒன்றின் உருவாக்கத்தில் மட்டுமே இலங்கை அரசியல் நீரோடை ஜனநாயக சமுத்திரத்தில் கலக்க முடியும் அதுவரை அது கறைபடிந்த சாக்கடையில் – கலப்பதை எவராலும் தடுக்க இயலாது.
இருளப்பன் ஜெகநாதன்
சுயாதீன ஊடகவியலாளர்