அரசாங்கம் தேர்தல் என்ற உடனேயே ஓடி ஒளிந்து கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் M.உதயகுமார் இன்றைய பாராளுமன்றில் தெரிவித்துள்ளார.
“ஒரு சிறிய உள்ளூராட்சி தேர்தலை கண்டு நடுநடுங்கும் அரசாங்கத்தை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறோம்
அரசாங்கம் தேர்தல் நடத்த தவறினாலும் நீதித்துறையின் அழுத்தம் காரணமாக தற்போது ஏப்ரல் 25ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் இந்த அறிவிப்பு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஜனாதிபதி
பாராளுமன்றில் தேர்தல் குறித்து வெளியிட்ட கருத்தினால் மீண்டும் சந்தேகம் வலுப்பெற்றுள்ளது
அதன்மூலம் உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தும் ஆர்வம் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இல்லை என்பது உறுதியாகிறது.
மக்களின் உரிமைகளை மீறும் வகையில் தேர்தல் பிற்போடப்பட்டால், அதற்கெதிராக உரிய நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
தெரிவித்துள்ளது.
இந்த அரசாங்கத்தில் உள்ள யாரைப் பார்த்தாலும் / வெளியிலே சென்று பேசும் போது உள்ளூராட்சி சபை தேர்தல் மூலம் நாட்டின் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று உரத்த குரலில் பேசி வருகின்றனர்.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாத தேர்தல் என்றால் அப்போது உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகாது. நீங்கள் வகிக்கும் சலுகை உடன் கூடிய அமைச்சுப் பதவியை பறிபோகாது. பாராளுமன்றத்தில் கிடைத்த ஜனாதிபதி பதவி பறிபோகாது. ஆகவே உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தலாமே ஏன் தயங்குகிறீர்கள்.?
நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் ஏன் தேர்தலை பிற்போடுகிறீர்கள் ? என்று அரசாங்கத்திடம் கேட்க
விரும்புகிறேன்.
உள்ளுராட்சி சபை தேர்தல் நடத்தப்பட்டால் – நிச்சயம் அது நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான – அடித்தளத்தை ஏற்படுத்திவிடும் என்பதே உண்மை.
அவ்வாறு நடந்தால் இவர்களுடைய ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது – என்பதும் மறுக்க முடியாத உண்மை. எனவே, இதனைக் கண்டு அச்சப்பட்டே தேர்தலை நடத்தாமல் – வெவ்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
தேர்தலுக்கு பணம் இல்லை என்பதும் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்பதும், வாக்கு சீட்டு அச்சிட பணமில்லை என்பதும் வெறும் சிறுபிள்ளைத்தனமான காரணம்.
தேர்தலை பிற்போட உண்மையான காரணம் தோல்வி பயம். ஆட்சி பறிபோய்விடும் என்ற அச்சம்.
ஆனால், உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்படாவிட்டால் – அது இலங்கை நாட்டிற்கு சர்வதேச அளவில் பாரிய அளவான அவப்பெயரையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்தும். சிலவேளை, தற்போது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உதவியும், உலக வங்கியின் உதவியும் கிடைப்பதில் தாக்கம் செலுத்தும் அல்லது தாமதம் ஆகலாம்
அத்துடன் GSP + வரிச்சலுகையும் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகளும் ஏற்படும்.
காரணம், ஒரு நாட்டின் ஜனநாயகம், மனித உரிமை போன்றவற்றிற்கு மதிப்பளிக்கும் அரசாங்கத்திற்கே சர்வதேச நிறுவனங்கள் நிதி உதவி வழங்கும்.
ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும், பாதணி அணிந்த கால்களால் எட்டி உதைக்கும் தரப்பினருக்கு சர்வதேச சமூகம் ஒருபோதும் கை கொடுக்காது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடத்துமாறு அமெரிக்க செனட்சபையின் வெளிவிவகார உறவுகளிற்கான குழு இலங்கை
அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேர்தல் ஒன்று நடத்தப்பட மாட்டாது. இதுவும் இந்த அரசாங்கத்தின் தேர்தல் ஒத்திவைப்பு சூழ்ச்சி திட்டத்தின் மற்றுமொரு நாடகமாகும். இன்று நாட்டில் மாகாண சபைகளுக்கும் அதேநிலையே ஏற்பட்டுள்ளது.
அல்லது தற்போதைய பொருளாதார நிலையில் தேர்தல் அவசியமில்லை என்ற தொனியில் ஒரு பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகள் வரப்பிரசாதங்களை வழங்கி அவர்களின் வாக்குகளை பெற்று அந்த பிரேரணையை நிறைவேற்றி
தேர்தலை பிற்போட்டு அல்லது ஒத்திவைத்து இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கூடும்.
இவ்வாறான சதித்திட்டங்களுக்கு மத்தியிலும் நாட்டு மக்களினுடைய வாக்குரிமை மற்றும் ஜனநாயகத்தை வென்றெடுக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் தலையாயக் கடமையாக இருக்கிறது.
அதேபோன்று எதிர்க்கட்சிகள் இந்த போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதற்கும் இரும்பு கரங்கள் கொண்டு அதனை முடக்குவதற்கும் இந்த அரசாங்கம் செயல்படும்.
இலங்கை கொடூரமான பாதுகாப்பு
சட்டங்களை கைவிடவேண்டும் என
ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்கான உயர்ஸ்தானிகர்
வொல்க்கெர் டேர்க் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த மீளேச்சத்தனமான தாக்குதல் இனியும் தொடரக்கூடாது என இந்த சபையிலே கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
போராட்டங்கள் ஒடுக்கப்படும் என ஜனாதிபதி பாராளுமன்றில் கூறியது மிகவும் கண்டிக்கத்த ஒன்றாகும். ஜனாதிபதியின் உரையை செவிமெடுக்கும் போது நாடு மெல்ல மெல்ல சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதையே காண்பிக்கிறது.
ஆகவே, சர்வாதிகார போக்கை கைவிட்டு ஜனநாயகத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.