நலன்புரி உதவித் திட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ம.உதயகுமார் தெரிவிததுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்…
“நமது நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் அன்றாடம் தமது வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்ட மக்களுக்கு உதவிகள் மற்றும் நலன்புரித் திட்டங்கள் மிகவும் இன்றியமையாதது.
நாட்டில் 2019ம் ஆண்டில் 11.3 சதவீதமாக இருந்த வறுமை நிலை 2020ம் ஆண்டில் 12.7 சதவீதமாக உயர்ந்தது.
அப்போது 3 லட்சம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ்பட்டவர்கள் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டனர்.
2021ம் ஆண்டில் வறுமை நிலை 13.1 சதவீதமாக மேலும் அதிகரித்தது.
2022 ஆம் ஆண்டில் கூடுதலாக 2.5 மில்லியன் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்தது.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வு, சேவைகள் மற்றும் தொழில்துறையில் வேலைகள் குறைப்பு, ரசாயன உரங்கள் மீதான தடை, வருமானம் வீழ்ச்சி போன்ற காரணங்களால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு சுகாதாரம், கல்வி போசாக்கு போன்றவை பெரிதும் பாதிக்கப்பட்டு
நாட்டில் வறுமை, மந்தபோஷனை, அதிகரித்துள்ளது.
நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறுமை பல மடங்காக அதிகரித்துள்ளது.
அதேபோன்று பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
இங்கே பெருந்தோட்ட மக்கள் என்றால் வெறும் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரம் கிடையாது. அங்கு வாழும் ஏனைய பிரிவு மக்களும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பல ஆபத்துகள் காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் வறுமை நிலை இன்னும் 25 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
உலக வங்கியின் முன்னைய ஆய்வுகள்படி 5 மில்லியன் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் எதிர்காலத்தில் அது இரட்டிப்பாகும் என தற்போது எதிர்வு கூறப்படுகின்றது.
அது மாத்திரமன்றி உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 7.4 சதவீதமாகவும் 2022 ஆம் ஆண்டில் 9.4 சதவீதமாகவும் காணப்பட்டது. இந்த வருடமும் அதே நிலை தொடர்கிறது.
அத்துடன் எதிர்மறையான பொருளாதாரக் கண்ணோட்டம்
2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் வருமானம் திரட்டும் சீர்திருத்தங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தினால் வறுமை நிலை மேலும் மோசமாகலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்மறை விளைவுகளைத் தணிப்பதற்கு அரசாங்கம்
நடவடிக்கை எடுக்கும் போது ஏழை எளிய மக்கள் நிச்சயமாக பாதிக்கப்படக்கூடியவர்கள் பட்டியலில் முன்னிலையானவர்களாக இருப்பார்கள்.
எனவே அவர்களுக்கு நலன்புரி நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இங்கு கூறப்பட்டுள்ள நலன்புரி உதவிகள் 2 மில்லியன் மக்களை சென்றடையும் என்று உள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகையில் 10 சதவீதமே அதுவாகும்.
உலக வங்கி கணிப்பின்படி மொத்த சனத்தொகையில் 25 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதாக கூறப்படுகிறது.
அப்படியானால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள எஞ்சிய 15 சதவீத மக்களுக்கான நலன்புரி உதவிகளை யார் வழங்குவது?
அதிக வறுமை கொண்ட மாவட்டமாக நான் தெரிவான நுவரெலியா மாவட்டம் காணப்படுகிறது. இந்த 2 மில்லியன் பயனாளிகளில் நுவரெலியா மாவட்டத்தில் எத்தனை பயனாளிகள் உள்வாங்கப்படுவர்?
ஏனைய நிவாரண திட்டங்களில் பாரபட்சம் காட்டப்படுவது போன்று பெருந்தோட்ட மலையக மக்களுக்கு இதிலும் அநீதி இழைக்கப்படுமா?
குறிப்பாக உலக உணவுத் திட்டத்தின் நிவாரண உதவித் திட்டம் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்படுகிறது.
இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் நுவரெலியா
மாவட்டததில் அதிகளவு பெருந்தோட்ட மக்கள் வாழும் நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச செயலக பகுதிகளை தவிர்த்து வலப்பனை மற்றும் ஹங்குராகெத்த பிரதேச செயலக பகுதிகளிலேயே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதற்கு என்ன காரணம்
இது பெருந்தோட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும்
எனவே இவ்வாறான அநீதிகள் எமது மக்களுக்கு தொடர்ந்தும் இழைக்கப்படுகிறது. இ
அதனால் இந்த நலன்புரி நிவாரணத் திட்டத்தில் பெருந்தோட்ட மலையக மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
பெருந்தோட்ட பகுதி மக்களுக்கு இன்னும் முழுமையாக காணி உரிமை கிடைக்கவில்லை. அனைவருக்கும் சொந்த வீடில்லை. ஆதாரப்பத்திரங்கள் எதுவுமே இல்லாத எட்டுக்கு எட்டு லயன் காம்பராவில்தான் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்
அத்துடன் ஒரே குடியிருப்பில் மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் வாழ்கின்றனர். ஆகையால் ஒரு வீட்டிற்கு ஒன்று என பிடிவாதத்தில் இருக்காமல் வீடுகளில் வாழும் ஒவ்வோரு குடும்பங்களை கருத்தில் கொண்டு நலன்புரி உதவிகளை வழங்கவும்.
இந்த நாட்டிலே அதிகூடியளவு வேலை செய்து அதிகூடிய அந்நிய செலாவணியை வருமானமாக ஈட்டிக் கொடுத்தும் மிகக் குறைந்தளவான சம்பளத்தைப் பெற்று வறுமையின் விளிம்பில் உள்ள பெருந்தோட்ட மக்கள் குறித்து இந்த அரசாங்கம் கரிசனையுடன் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.