கிரேக்கத்தில் பதிவான மிகவும் துயரமான பேரழிவுகளில் ஒன்றான 43 உயிர்கள் காவு கொள்ளப்பட்ட ரயில் விபத்து ஒரு ”மனிதத் தவறு” என அந்நாட்டு பிரதமர் Kyraikos Mitsotakis தெரிவித்துள்ளார்.
கிரேக்கத்தில் ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தை சென்று பார்வையிட்டதன் பின்னர் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அதேநேரம், அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் பதவி விலகியுள்ளார்.
நேற்று முன்தினம்(28) கிரேக்கத்தின் வட பகுதியில் 350 பயணிகளுடன் பயணித்த ரயிலொன்று சரக்கு ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில் பயணித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள ரயில் நிலைய பொறுப்பதிகாரி, இந்த விபத்து தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்டிருப்பதற்கு சாத்தியம் இல்லை என கூறியுள்ளார்.
விபத்து சம்பவித்த இடத்தை சென்று பார்வையிட்டதன் பின்னர் இதுவொரு மனிதத் தவறு என பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீதி அதன் கடமையை செய்யும் எனவும் அரசாங்கம் மக்கள் பக்கம் இருக்கும் எனவும் தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய போது பிரதமர் தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்தில் உயிரிழந்த சிலரின் சடலங்களை மரபணு (DNA) பரிசோதனை ஊடாகவே அடையாளம் காண முடியும் என்பதால், காணாமல் போனவர்களின் உறவினர்கள் DNA மாதிரிகளை வழங்குமாறு Larissa நகர மேயர் தெரிவித்துள்ளார்.