புகையிரத உப ஒழுங்குப்படுத்தல் சேவையாளர்கள் திடீரென ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பால் இன்று புதன்கிழமை (4) மாலை பல புகையிரத சேவைகள் தாமதமடைந்தன.
புகையிரத உப ஒழுங்குப்படுத்தல் சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பால் அலுவலக புகையிரத சேவைகள் உட்பட தபால் புகையிரத சேவை உள்ளடங்களாக 78 புகையிரத சேவைகள் இரத்தாகியுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை மாளிகாவத்தையில் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கும் புகையிரத பாதுகாப்பு சேவை அதிகாரி ஒருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன் போது பிரதி கட்டுப்பாட்டாளர் தாக்கப்பட்டதையடுத்து, தாக்குதலை மேற்கொண்ட புகையிரத பாதுகாப்பு ஊழியரின் சேவையை இடைநிறுத்துமாறு கோரி கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தது.
இதன் காரணமாக தொழில் உட்பட பல்வேறு தேவைகளுக்காக புகையிரதத்தில் பயணிப்பதற்காக காத்திருந்த பயணிகள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியிருந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.