ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெண்கள் முன்னிலையில் இருப்பதாகவும், அந்த நிலைமையை மேலும் விரிவுபடுத்தி, உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
“பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கை” மற்றும் “பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்திட்டம்” ஆகியவை அதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சார்க் அமைப்பில் பெண்களின் உரிமைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாததால், அந்த உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக சார்க் நாடுகளின் பிரதான பெண் செயற்பாட்டாளர்களின் கூட்டம் இந்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஆசிய பிராந்தியத்தில் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் இலங்கை முன்னிலையில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இன்று (08) இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின தேசிய விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“அவள் தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளில் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவினால் “பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கை” மற்றும் “பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்திட்டம்” என்பன இங்கு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
2023 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால், பெருமை மற்றும் கீர்த்திமிக்க பெண்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டதுடன், கலாநிதி சுஜாதா அத்தநாயக்க, கலாசூரி சிரியாணி அமரசேன, அனுலா டி சில்வா மற்றும் ரஷ்மி நிமேஷா குணவர்தன ஆகியோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை மகளிர் பணியகத்தின் தலையீட்டில் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த 25 பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான பணி வெற்றியடைய உறுதுணையாக இருந்ததோடு, கடினமான காலங்களில் பொருளாதார சவால்களை வெற்றிகொள்ள உதவிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம், அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கும் ஜனாதிபதி இங்கு நன்றி தெரிவித்தார்.ன்.
நிர்மலா சீதாராம் தான் இந்தியாவின் நிதியமைச்சர். அவர்தான் பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் கலந்துரையாடி இலங்கைக்கு 03 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க தீர்மானித்தவர். அது, கடந்த ஏப்ரலில் நாங்கள் வங்குரோத்தாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு நடந்தது. வங்குரோத்தான நாட்டுக்கு கடன் கொடுப்பது மிகவும் துணிச்சலான செயல் ஆகும். எனவே முதலில் அவருக்கு நன்றி கூற வேண்டும். அந்த 03-04 மாதங்களில், அந்த 03 பில்லியன் ரூபா கிடைக்கவில்லை என்றால் இன்று நாட்டின் நிலைமையை நான் சொல்ல வேண்டியதில்லை.
இரண்டாவதாக, பல முக்கிய நாடுகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த நாடுகளில், முக்கியமான நாடு அமெரிக்கா. இதற்கு அந்நாட்டின் திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தலைமை தாங்கினார். அவருக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
பல்வேறு நாடுகள், பாரிஸ் கிளப், உலக வங்கி உட்பட அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, தலைமையேற்று தனிப்பட்ட ரீதியில் தியாகத்துடன் செயற்பட்டார் என்பதை நான் குறிப்பிட வேண்டும். இந்த மூன்று பெண்களும் எங்களுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால், நாங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருப்போம்.
ஒருபுறம், இந்தப் பிரச்சினைக்குக் காரணமானவர்களில் பெண்கள் ஒருவரும் இல்லை என்பதுடன் மறுபுறம், உதவியவர்களில் பெண்களும் உள்ளனர். இந்த மூன்று பெண்களின் மீது கவனம் செலுத்தும்போது, இந்தப் பெண்கள் ஏன் இந்த இடங்களில் இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். ஏன் நம் நாட்டில் இவ்வாறானவர்கள். இவர்கள் மூவர் மட்டுமல்ல, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேன் மற்றுமொரு பெண். ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்திய வங்கியின் ஆளுநர் கிறிஸ்டின் லகார்ட் மற்றொரு பெண் ஆவார்.
சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க திறைசேரி அனைத்தும் இன்று பெண்களின் கைகளில் உள்ளன. பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்த பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலக வர்த்தக அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஒகோன்ஜோ இவேலா போன்று, உலக உணவுத் திட்டத்தின் புதிய பணிப்பாளர் சிண்டி மெகெய்ன் ஆகியோர் பெண்கள் ஆவர். எனவே, எங்களுக்கு உணவு மற்றும் உதவி வழங்கும் இந்த பொருளாதாரத் துறையில் பெரும்பாலான பணிகள் பெண்களின் தலைமையின் கீழ் இயங்குகின்றன. இந்த 50 வருடங்களில் பெண்கள் முன்னேற்றம் அடைந்திருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடையலாம். ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் அவர்கள் பின்பற்றிய கொள்கைகளினாலேயே இது நடந்தது.
குறிப்பாக, பெண்களின் உரிமைகளை மேம்படுத்தும் திட்டங்களை நாம் தொடங்கினோம். அதுதான் இலங்கைக்கும் ஆசிய நாடுகளுக்கும் உள்ள வித்தியாசமாகும்.
இலங்கை குறித்து நாம் கவனம் செலுத்தும் போது 92 வருடங்களுக்கு முன்னர் எமது முதல் பெண் எம்.பி. தெரிவுசெய்யப்பட்டார். 1960 ஆம் ஆண்டு உலகின் முதல் பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கா தெரிவானார். ஆனால் நாம் முன்னேற்றம் அடையவில்லை.இன்று சில நாடுகளில் அரசியல் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்தது 20% – 25% ஆக உள்ளது. ஆனால் நாம் அந்த மட்டத்தை அடையவில்லை.
எங்கள் நிர்வாகத் துறையில் பெண்கள் முன்னிலைக்கு வந்துள்ளனர். அதில் எந்தக் பிரச்சினையும் இல்லை. கல்வித் துறையிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. ஆனால் வணிகத் துறை போன்ற பல துறைகளில் இந்தக் குறைபாடு உள்ளது.
இந்நிலையை மாற்றியமைக்கும் வகையில் மகளிர் விவகார அமைச்சுடன் இணைந்து கொள்கை அறிக்கை தயாரிப்பதற்காக 02 குழுக்கள் நியமிக்கப்பட்டன.
இந்த இரண்டு குழுக்களின் அறிக்கைகளையும் அமைச்சரவை அங்கீகரித்து என்னிடம் வழங்கியுள்ளது. 2023 முதல் 2033 வரை “பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான தேசியக் கொள்கை” மற்றும் “பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான தேசியக் கொள்கை” ஆகிய இரண்டும் தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த செயற்பாடுகளை இத்தோடு நாம் நிறுத்த மாட்டோம். இது குறித்து விரிவாக ஆராய்ந்து, இதில் சேர்க்கப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து யோசனைகளைப் பெறுவோம்.
அத்துடன் பாராளுமன்ற மகளிர் அமைப்புடன் கலந்துரையாடி எமது வேண்டுகோளின் அடிப்படையில் 03 வரைவுகள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன.
அதில் ஒன்று பாலினம் மற்றும் சமத்துவ சட்டம், மற்றொன்று பெண்களை வலுவூட்டும் சட்டம் மற்றும் தேசிய ஆணைக்குழு. இவை குறித்து இந்த மாதத்திற்குள் ஆராய்ந்து குறைந்தபட்சம் ஜூன் மற்றும் ஜூலைக்குள் சட்டமாக்க வேண்டும்.
இது தவிர அரசாங்கத்துடன் தொடர்பில்லாத மக்கள் சபைகள் தொடர்பான சட்டமூலத்தையும் கரு ஜயசூரிய தயாரித்து வருகின்றார். அவருடன் கலந்துரையாடி அதில் பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளை உள்ளடக்குமாறு பாராளுமன்றத்தில் உள்ள மகளிர் குழுவிற்கும் அமைச்சிற்கும் பரிந்துரைத்துள்ளேன்.
அத்தோடு, பெண்கள் மற்றும் பாலினத்திற்கான ஒரு நிறுவனத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம். இதன் ஊடாக பெண்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த வாய்ப்பு ஏற்படும். பெண்களுக்காக இந்தப் பணியைச் செய்ய எதிர்பார்க்கிறேன். இது எங்கள் கொள்கையின் ஒரு பகுதியாகும்.
அதேநேரம், பெண்களின் உரிமைகள் குறித்து ஆராய்வதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகளைக் கொண்டு பாரிய மாநாடொன்று நடத்த எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தத் துறைகள் என்ன என்பது குறித்து எமது பெண் எம்.பி.க்களின் அமைப்பு மற்றும் அமைச்சின் செயலாளருடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து தீர்மானிப்போம். 500-1000 பேர் கொண்ட குழு அங்கு கூடும் என்று நினைக்கிறேன். அவர்களுடன் இது குறித்து ஆராய வேண்டும்.
இன்று நாடளாவிய ரீதியிலும் மகளிர் விவகார அமைச்சிலும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அரசியல் காரணமாக சிலவற்றில் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால், பெண்களின் உரிமைக்காகவும் அதைச் செயல்படுத்தவும் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அந்த மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொள்ளும். . அதுதான் எங்களின் புதிய திட்டம்.
ஆனால் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ வாழவில்லை. நாங்கள் ஆசியாவில் இருக்கிறோம். ஆசியாவில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது கிடையாது. பெண்கள் இப்படி முன்வரவில்லை. முழு ஆசியாவை மையமாகக் கொண்டு, கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளில் பெண் தலைவர்கள் இருந்தனர். எஞ்சிய அனைவரும் தெற்காசியாவிலிருந்தே வந்துள்ளனர். குறிப்பாக பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து வந்துள்ளனர். சோனியா காந்தி உட்பட ஏழு பேர் உள்ளனர். ஆனால் இந்தப் பிராந்தியங்களில் பெண்களுக்குக் கிடைத்துள்ள உரிமைகள் குறித்து நாம் திருப்தியடைய முடியாது.
இன்று ஆப்கானிஸ்தானில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெண்கள் கல்வி கற்க முடியாது, வேலைக்குச் செல்ல முடியாது. அவர்களின் உரிமைகளை அனுபவிக்க முடியாது. இந்தச் சூழலில், தெற்காசியா, குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைத்தீவு மற்றும் இலங்கை என்ற வகையில் இதைப் பற்றி ஆராய்வோம்.
ஏனெனில் சார்க் அமைப்பில் பெண்களின் உரிமைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த உரிமைகளை எவ்வாறு பெறுவது என்பது தொடர்பில் நாம் இணைந்து கலந்துரையாடி , மகளிர் விவகார அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து இந்த வருடத்தில் இந்த நாடுகளின் பிரதான பெண் செயற்பாட்டாளர்களின் கூட்டத்தை இலங்கையில் நடத்த தீர்மானித்துள்ளன.
இலங்கையை மாத்திரம் முன்னோக்கி கொண்டு செல்வது வெற்றியளிக்காது. இப்பிராந்தியத்திலேயே இதனை செயல்படுத்த வேண்டும். அந்த வழியைப் பின்பற்றும்படி ஏனையவர்களையும் கேட்டுக் கொள்வதோடு நாங்கள் அந்த செயல்முறையில் முன்னணியில் இருப்போம்.
பெண்களின் உரிமைகளை நடைமுறைப்படுத்துவதோடு ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல பெண்களுக்கும் அந்த உரிமைகளை வென்றெடுப்போம். இந்நாட்டு மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். அந்த மக்கள் அனைவரின் உரிமைகளையும் நாம் பாதுகாக்க வேண்டும். இதை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆராய்ந்து முன்னோக்கிச் செல்வோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன உரையாற்றுகையில்:
இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த கொள்கையானது இலங்கைப் பெண்களுக்கு பாரிய முன்னோக்கிய படியாகும். இன்றிருக்கும் நிலையில் இலங்கைக்கு ஒரு போதும் இருந்ததில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையிலான அரசாங்கம் நாட்டை முன்னேற்றுவதற்கு மிகவும் பொறுமையாக படிப்படியாக செயற்பட்டுள்ளது என்பது தற்போது தெளிவாகியுள்ளது. அந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயல்முறைக்கு பெண்களாகிய நீங்கள் பலம் தருகிறீர்கள்.
பெண்கள் வலுவூட்டல் என்ற இலக்கை அடைவதற்கு பெண்களை வங்கி முறைக்குள் பிரவேசிக்கக்கூடிய வகையில் இலங்கையில் வங்கி முறை தாராளமயமாக்கப்பட வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். இதன்படி, இலங்கையில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் வங்கிக் கணக்கைத் திறப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க:
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மிகவும் சிரத்தையுடன் உழைத்த நிலையில் பெண்கள் சாசனத்தை அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. சர்வதேச மகளிர் தினத்தன்று அவருக்கு அதை வழங்குவது வரலாற்று சிறப்பு மிக்கதாகும். சமூகத்தில் பெண்கள் தனியாக இருக்கக்கூடாது. எந்தத் தொழிலை செய்வதாக இருந்தாலும் அவர்கள் இந்நாட்டின் குடிமக்கள். ஒரு நாட்டின் பெருமை பெண்கள் என்பதை புரிந்து கொண்டு இந்த நாட்டில் 52% இருக்கும் பெண்களை மரியாதையுடன் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பெஸ்குவல், சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அறம்பேபொல, சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷனி பெர்னாண்டோ, யாதாமினி குணவர்தன, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி யமுனா பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் சி கலந்துகொண்டனர்.ளிட்ட அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.