மன்னார் மடு பெருவிழாவை முன்னிட்டு இவ் விழாவினை மன்னார் கத்தோலிக்க மீடியா மூலம் நேரலையாக ஒளிப்பரப்பச் சென்ற மன்னார் கத்தோலிக்க ஊடக தொகுப்பாளர் திடீர் மரணம் பாம்புக் கடியினாலேயே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் ஞாயிறு (13) இரவு மருதமடு அன்னையின் ஆலயப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மடு ஆவணி பெருவிழாவை முன்னிட்டு பத்து தினங்களும் நேரலையாக மன்னார் கத்தோலிக்க மீடியா முலம் அனுப்புவதற்காக செயல்படுத்தச் சென்ற மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புதுக்கமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் டிறோன் (வயது 28) என்பவரே திடீரென மரணித்துள்ளார்.
இவருடைய திடீர் மரணம் தொடர்பாக மன்னார் மரண விசாரனை அதிகாரி எஸ்.ஈ.குமணகுமார் இவரின் தாயை விசாரணைக்கு உட்படுத்தியபோது இத் தாயானவர் தனது மகன் இடையிடை மது பானம் அருந்தினாலும் இவருடைய மரணத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதாக தனது மரண விசாரனையின்போது தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்தவரின் உடற்கூற்று பரிசோதனையில் பாம்புக் கடியினாலேயே இவர் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மடு விழாவின் நவநாட்கள் நடைபெற்ற இரு தினங்கள் அங்கு ஒரு சில மணி நேரம் பெய்த மழை காரணமாக விஷ ஜந்துக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியமையால் இக்குறிப்பிட்ட தினங்களில் சுமார் 25 பேர் விஷ ஜந்துக்களின் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றதாகவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(வாஸ் கூஞ்ஞ)