மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் மாற்றுப் பயிராக பயறு செய்யப்பட்டத்தில் கூடிய பலாபலன்களை விவசாயிகள் பெற்றுள்ளனர். அதிலும் இதன் மூலம் பெண்கள் நாளாந்தம் ஐயாயிரம் ரூபா வருமானத்தை பெறும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட கமநல சேவைப் பணிப்பாளர் திருமதி சாகிரா பாணு இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மன்னார் மாவட்ட கமநல சேவைப் பணிப்பாளர் திருமதி சாகிரா பாணு மேலும் தெரிவிக்கையில்
இந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் மிகவும் வெற்றிகரமாக பயறு செய்கைப் பண்ணப்பட்டுள்ளது.
சுமார் 1600 ஹெக்டர் பரப்பிலே இபபயிர் செய்கைப் பண்ணப்பட்டிருந்தது.
இந்த பயிர் செய்கைக்காக கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் கீழ் இயங்கி வரும் அமைச்சின் ஊடாகவும் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தின் மூலமாகவும் மற்றும் கமக்காரர்களின் சொந்த பணத்திலும் இந்த விவசாயிகளுக்கு பயறு நடுகைகளுக்கான பொருட்கள் வழங்கக் கூடியதாக இருந்தது.
இந்த பயிர் செய்கையின் மூலம் சுமார் 900 மெற்றிக் தொன் பயறு மன்னார் மாவட்டத்தில் விற்பனைக்காக தற்பொழுது தயார் நிலையில் இருக்கின்றது.
ஒரு கிலோ கிராம் பயறு 825 ரூபா தொடக்கம் 850 ரூபா வரை விற்பனைக்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
எனினும் இந்தப் பயறுகளுக்கான விலைகளை உரிய காலத்தில் பெறுவதில் பல சிரமங்களும் ஏற்பட்டுள்ளன.
விவசாய திணைக்களத்தின் விவசாய விதை நடுகைப் பிரிவினர் மன்னார் மாவட்ட பயறு நடுகை காலத்தில் கவனம் செலுத்தி ஹம்பாந்தோட்டையிலிருந்து கொண்டு வரப்பட்ட நடுகைக்கான பொருட்களை கொண்டு வந்தமையாலேயே மன்னாரில் நல்ல விளைச்சளைக் கொடுத்துள்ளது எனலாம்.
இம்முறை சிறப்பாக கட்டுக்கரைக்குளத்தின் கீழுள்ள நெல் வயல்களிலே மாற்றுப் பயிராக இது செய்கைப் பண்ணப்பட்டது.
இதனால் இம்முறை இச்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் அதிக வருமானத்தை ஈட்டக்கூடியதாக இருந்தது.
நெற்செய்கைப் பண்ண முடியாத நிலத்தில் இவ்வாறான பயிர்களை குறைந்த நீரில் செய்கைப் பண்ணக்கூடியதாகவும் காணப்பட்டுள்ளது.
இந்த பயறு செய்கையினால் இம்மாவட்டத்தில் பல பெண்கள் தொழில் வாய்ப்புக்களை பெற்றுள்ளனர். ஒரு கிலோ கிராம் பயறு பிடுங்கினால் தலா நூறு ரூபா வேதனம் பெறுகின்றனர்.
ஒரு பெண் ஒரு நாளில் 50 தொடக்கம் 60 கிலோ கிராம் பயறுகளை பிடுங்குவதாக தெரிய வந்துள்ளது.
இதனால் பயறு அறுவடை காலத்தில் ஒரு பெண் நாளாந்தம் 5000 ரூபா தொடக்கம் 6000 ரூபா வருமானம் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
பயறு செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீண்டும் அடுத்த பயறு செய்கை போகத்துக்கு வேறு மாவட்டங்களை எதிர்பார்க்காது ஒரு ஏக்கருக்கு பத்து கிலோ கிராம் அதாவது ஈடுபடும் விவசாயிகள் உங்கள் காணியின் அளவுக்கு ஏற்றவாறு உரிய முறையில் விதைக்கான பயரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கான ஆலோசனைகளை உங்கள் பகுதியிலுள்ள விவசாய போதனா ஆசிரியர்களை சந்தித்து செயல்பட முடியும்.
அத்துடன் காலபோக நெற்செய்கை அறுவடைக்குப் பின் அந்த நெல் வயலிலுள்ள ஈரத்திலேயே பயரை விதைத்து அடுத்த சிறுபோகத்துக்கான உங்களுக்கான விதைப் பயிரை பெற்றுக் கொள்ள முடியும்
ஆகவே அடுத்த பயறு செய்கைக்கான விதை பயறுகளை இதில் ஆர்வம் கொண்ட விவசாயிகள் இப்பொழுதே சேமித்து வைத்தக்கொள்ள ஆர்வம் காட்டுங்கள் என இவ்வாறு தெரிவித்தார். (60)
(வாஸ் கூஞ்ஞ)