பல வருடங்களாக நடைபெறாத, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலக்கிய விழாவான காலி இலக்கிய விழாவை (Galle Literary Festival) சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் மீண்டும் பிரமாண்டமாக நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு இணையாக, பல்வேறு கலை அம்சங்கள் அடங்கிய தொடர் நிகழ்ச்சிகளை காலி, மாத்தறை, அஹங்கம மற்றும் ஹிக்கடுவ ஆகிய பிரதேசங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, இதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல் நேற்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
அந்தத் தொடர் நிகழ்ச்சிகளை 2024 ஜனவரி மாதத்தில் நடத்த இங்கு தீர்மானிக்கப்பட்டது.
நவீன கலை ஊடகம் (Modern Art), , இசை, ஆடை வடிவமைப்புக் கண்காட்சி (Fashion Show) புத்தகக் கண்காட்சி, கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை அம்சங்களுடன் இந்தத் தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவதோடு, இலங்கையின் அடையாளத்தையும் பெருமையையும் உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் அனைத்து செயற்பாடுகளையும் ஏற்பாடு செய்வதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்ச்சிக்கு இணையாக சுற்றுலாத் துறையை இலக்காகக் கொண்ட பல்வேறு கலை அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறச் செய்வது அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு என்றும், அதற்காக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களுக்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியமானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.