ஒருவன் தன் கல்வி அறிவை மேம்படுத்திக் கொள்ள எத்தனை பட்டங்களை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால் அனைத்தையும் தீர்மானிக்கின்ற அரசியல் அறிவை அவன் பெற்றுக் கொண்டு அதற்கேற்றவாறு இயங்காமல் தவிர்க்கும் போதுதான் மோசமான அறிவிலி ஆகிறான்.
அரசியல் நிலவரங்கள் குறித்து அவன் எதையும் கேட்காத போது, பேசாத போது அல்லது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்டு கள நிலவரங்களை அறிந்து கொள்ளாத போது வெறும் புத்தகப் பூச்சியாகவும் அறிவிலியாகவும் பரிணாமம் பெறுகிறான்.
அரசியல் சாக்கடை என்றும் அதற்குள் இறங்கி சேறு பூசிக்கொள்ளத் தான் தயார் இல்லை என்றும் அறிவிப்பதன் ஊடாக தன்னை மேலும் அறிவிலி நிலைக்குத் தானே தள்ளி விடுகிறான்.
அரசியல் புரிகின்ற அல்லது அரசியலில் ஈடுபடுகின்ற சக்திகளால் முன் மொழியப்பட்டு, எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கு அமையவே தன் வாழ்க்கையின் அத்தனை கூறுகளும் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான்.
அனைத்தையும் அறிந்த ஆனால் அரசியலை அறியாத அப்பாவியாக, புத்திசீவியாக அவன் சமூகத்தில் உலா வருகிறான்.
உணவு, உடை, போக்குவரத்து, மருத்துவம், சுகாதாரமென வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் இந்த அரசியலே தீர்மானிக்கின்றது என்ற பேருண்மையை அவன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறான்.
தான் கற்றுக் கொண்ட வித்தைகளை தன் மாணாக்கர்களுக்குக் கற்றுக் கொடுத்து, அவர்களை புலமை உள்ளவர்களாக மாற்றி விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற பிழையான தீர்மானத்திற்கு வருகிறான்.
அரிசி, மாவின் விலை, மீன், முடடைகளின் விலை, பஸ் கட்டணங்களின் விலை என்பன அதிகரிக்கும் போது மட்டும் அரசியல்வாதிகளைத் திட்டித் தீர்க்கிறான். காரணம் இதன் பின்னணியில் இருக்கின்ற அரசியல் அவனுக்குத் தெரியாது.
“அரசியலை நான் வெறுக்கிறேன்” என்று அடிக்கடி பெருமையுடன் சொல்லுமளவுக்கு அவன் ஒரு மூடன்.
கொலை, கொள்ளை, திருட்டு, விபசாரம், என தன் சூழலில் நிகழும் சமூக சீர் கேடுகளைக் கண்டு வெறுப்படையும் அவன் இதற்குப் பின்னால் இருக்கின்ற அரசியல் என்ன என்பதை விளங்கிக் கொள்ளாத மூடனாக இருக்கிறான்.
இத்தனைக்கும் பின்னால் தன்னை சிறந்ததொரு புத்திசீவியாக உணரும் அவன் ஊழல் அரசியல்வாதிகள் கொணரும் சகல சட்டங்களையும் மதிக்கின்ற நீதிக்குத் தலை வணங்குகின்ற நேர்மையானவன் ஆகின்றான்.
அதிகார வர்க்கத்தை எதிர்ப்பது என்பது சட்ட திட்டங்களுக்கு முரணானது என போதிக்கிறான்.
இவை அனைத்துமே தனது அரசியல் அறிவின்மையால் தான் உருவாகின்றன என்ற உண்மை அவன் அறிவுக்கு எட்டுவதே இல்லை.
மாக்ஸ் பிரபாஹர்