நிர்வாகம் வழங்கிய உறுதிமொழியைடுத்து வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சம்பள அதிகரிப்பு, போனஸ் கொடுப்பனவு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் ஊழியர்கள் கடந்த சில நாட்களாக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு போனஸ் வழங்குவதற்கு நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது, அது வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், எம்.பியுமான மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோரின் ஆலோசனைக்கமைய இ.தொ.கா பிரதிநிதிகள் வட்டவளை ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ், அமைச்சரின் இணைப்பு செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ராஜரட்ணம் ஆகியோர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக தரப்பினருடன் அவர்கள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
இதன்போது சம்பள உயர்வு அவசியம், போனஸ் வழங்கப்பட வேண்டும், தற்போது வழங்கப்படும் உணவு மாற்றப்பட வேண்டும், சில மேற்பார்வையாளர்களின் செயற்பாடுகள் மோசமாக உள்ளன என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிலாளர்கள் முன்வைத்தனர்.
இதற்கு உணவு மாற்றம், மேற்பார்வையாளர் விவகாரம் உள்ளிட்ட விடயங்களுக்கு நிர்வாக தரப்பில் சாதக பதில் வழங்கப்பட்டுள்ளது. போனஸ் தொடர்பில் மேலதிடத்தில் கதைத்துவிட்டு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பணி புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்ற 4 நாட்களுக்கும் சம்பளம் வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக தரப்பில் இருந்து கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, பணியை ஆரம்பிக்க ஊழியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
(அந்துவன்)