சிவனொளிபாதமலையேறுவதற்கு பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் வருகை தந்த 15 இளைஞர்கள் கடந்த இரு நாட்களுக்குள் அட்டன் பொலிஸின் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அட்டன் ரயில் நிலைய வளாகத்தில் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே, ரயிலில் வந்த குறித்த இளைஞர்கள், பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
கொழும்பு, காலி, அநுராதபுரம் மற்றும் குருணாகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின், கஞ்சா, கஞ்சா கலந்த புகையிலை தூள் மற்றும் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் என்பன கைதானவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர்கள் அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிட்டு, சரீரப் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.
(அந்துவன்)