( நூரளை பி. எஸ். மணியம்)
இந்த நாட்டிலுள்ள பெருந்தோட்ட கம்பனி நிர்வாகங்கள் தொழிற்சங்க சட்டத்தையும் கூட்டு ஒப்பந்தத்தையும் மீறி செயல்படுகின்றார்கள். இதனால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். இதிலிருந்து மீள்வதற்கு பெருந்தோட்ட தொழிலாளர்களும் பெருந்தோட்ட தொழிற்சங்க அரசியல் கட்சிகளும் தங்களது தொழிற்சங்க அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும்.
என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட தமிழ் பிரதிநிதிக்குழு தலைவரும் இக்கட்சியின் நுவரெலியா அமைப்பாளர் கலாநிதி சதானந்தன் திருமுருகன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,இந்த நாட்டில் தொழில் சட்டம் மீறப்பட்டுள்ளது. இந்த நாட்டில் தொழிற் சட்டம் ஒன்று இருக்கின்றதா ? என்ற கேள்வி குறியும் ஏற்பட்டுள்ளது. வெள்ளையர்களால் கடந்த 200 வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்திய சட்டம்தான் இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. அது இன்றைக்கு சாத்தியமில்லை.அன்றைக்கு இருந்த நிலமை வேறு இன்றைக்குள்ள நிலமை வேறு இன்று பெருந்தோட்ட கம்பனிகள் தான் தோன்றிதனமாக அவர்களுக்கு ஏற்ற முறையில் இலாபத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ள செயல்படுகின்றார்கள்.
தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தொழில் சட்டத்தை மீறி செயல்படுகின்றனர். இது ஒரு மனித உரிமை மீறும் செயலாகும்.தோட்டங்களில் சுகாதார பாதுகாப்பு இல்லை. தொழிலாளர்களின் வேலைப்பளு அதிகரித்துள்ளது. அதிகரிக்கப்பட்ட ஆயிரம் ரூபா சம்பளம் ஒருசில தோட்டங்களில் மாத்திரம் வழங்கப்படுகிறது. அதிகமான தோட்டங்களில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படுவதில்லை.
தோட்டங்களை முறையாக பாராமரிக்கப்படாததால் தோட்டங்களில் புற்கள் தேயிலை செடிக்கு மேல் வளர்ந்து தோட்டங்கள் காடாகி அட்டைகள், குளவிகள், விசப்பாம்புகள் மற்றும் சிறுத்தைகள் அதிகரித்துள்ளது. தொழிலாளர்கள் தேயிலை மலையில் கொழுந்து பறிக்க செல்லவே அச்சம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றால் மிருகங்களை பார்ப்பதற்கு மிருக காட்சிசாலைக்கு செல்ல தேவையில்லை அட்டன், தலவாக்கலை மற்றும் நுவரெலியா பிரதேசங்களில் பார்க்கலாம்.
இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் தேயிலை உற்பத்தி தொழிலை நம்பி எமது தொழிலாளர்களின் வாழ் வாதாரம் நடைபெற்று வருகின்றது. அந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கலை கலாச்சாரம் இருப்பை தக்க வைத்துக்கொள்ள பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கெடுபிடியிலிருந்து தடுப்பதற்கு தொழிலாளர்களும் தொழிற்சங்கங் களும் ஒன்றிணைந்து செயல்பட்டு முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஒரு அழுத்தம் கொடுத்து மீண்டும் கூட்டு ஒப்பத்தை நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும். என திருமுருகன் மேலும் தெரிவித்துள்ளார்.