வடகொரியாவில் லட்சக்கணக்கானோர் திரண்டு கொரிய போர் தொடங்கப்பட்டதன் 73வது நினைவு நாளை அனுசரித்தனர்.
அப்போது அமெரிக்காவை அழிக்க பழிவாங்கும் போர் நடத்துவோம் என்று அவர்கள் சூளுரைத்தனர்.
வட கொரிய அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில் 1,20,000 மக்கள், மாணவர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தில் மக்கள் தங்களின் கைகளில் அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களுடன் கூடிய பதாகைகளை வைத்திருப்பதை ஆவணப்படுத்தியிருந்தது.
“ஒட்டுமொத்த அமெரிக்க நிலப்பரப்பும் எங்களின் துப்பாக்கிகளின் வீச்சுக்குள் இருக்கின்றது”, “எதேச்சதிகார அமெரிக்கா அமைதியை அழிக்கும் தேசம்”, “அமெரிக்காவை அழிக்க பழிவாங்கும் போரை நடத்துவோம்” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை மக்கள் வைத்திருந்தனர்.
வட கொரியா விரைவில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் முதல் உளவு செயற்கைக்கோளை ஏவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வாகசங்களை அந்நாடு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.