(இப்னு ஷெரீப்)
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு உள்ளிட்ட கரையோரப் பிரதேசங்களில் நீண்டகாலத்திற்குப் பின்னர் கரைவலைக்கு அதிகளவான கீரி மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் இப்பிரதேசங்களில் ஏற்பட்ட பாரிய கடலரிப்பு மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக மீன்பிடித் தொழில் முற்றாக செயலிழந்திருந்தது. இதனால் இத்தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தவருகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அதிகளவான கீரி மீன்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் கரைவலை மீன் பிரியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுததியுள்ளது.
அதிக மீன்பிடி காரணமாக இப்பிரதேசங்களில் கரைவலை மீனுக்கான விலையும், தட்டுப்பாடும் சடுதியாகக் குறைந்துள்ளது. தற்பொழுது ஒரு கிலோ கிராம் கீரிச் சூடை மீன் 300 ரூபா முதல் 600 ரூபா வரை விற்கப்படுகிறது. கடந்த காலங்களில் இவ்வகையான மீன்களுக்கு அதிக கிராக்கி நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது.