நூருல் ஹுதா உமர்

அண்மையில் வெளியான சனல் 04 காணொளி விடயம் பொய்யாக புனையப்பட்ட விடயமல்ல. அதில் அவிழ்க்கப்படாத இன்னும் பல மர்மங்கள் உள்ளது போன்றே தெரிகிறது. சக்திவாய்ந்த அந்நிய நாடுகளின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே இப்படியான சம்பவங்கள் இலங்கையில் அரங்கேறுகிறது. இலங்கை முஸ்லிங்களை குறிவைத்து அதிகார கதிரையை நோக்கியதாக முன்னெடுக்கப்பட்ட பெரிய சக்திகளின் பந்தாடலுக்குள் இலங்கை முஸ்லிம் சமூகம் சிக்கிக்கொண்டுள்ளது. பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் கொலையுடனையே முஸ்லிம் சமூகத்தின் மீதான பந்தாடல்கள் ஆரம்பித்துள்ளதாக நம்புகிறேன். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

மருதமுனை மருதூர் கொத்தன் கலையரங்கில் நேற்று இரவு (17) நடைபெற்ற மருதமுனை பைத்துல் ஹெல்ப் போ ரிலீப் அமைப்பின் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தெற்காசியாவின் பூகோள அரசியல் போட்டிக்காக இலங்கையின் நிலையை மோசமான சூழ்நிலைக்கு சில சக்திகள் கொண்டுசெல்கின்றன. அமெரிக்க ரஷ்ய பனிப்போரில் சில நாடுகள் சிக்கிக்கொண்டது போல சீன-அமெரிக்க பூகோள அரசியல் போட்டியில் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு கேந்திர நிலையமான இலங்கை மாட்டிக்கொண்டுள்ளது. இலங்கையில் யார் ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம் அமைக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது மேற்கத்தைய சக்திகளாகவே இருக்கிறது. அவர்கள் தமது சுயநலனுக்காக சுயாதீனமாக எமது நாட்டை கொண்டுசெல்ல விடமாட்டார்கள். அவர்கள் சரியாக திட்டமிட்டு நாட்டை சீரழிக்க காய் நகர்த்துவார்கள்.

 குறிப்பாக சணல் 4வில் வெளியான காணொளியில் ஆசாத் மௌலானா கூறிய விடயங்களை இலேசில் தட்டிக்கழிக்க முடியாது. அதில் பல உண்மைகள் இருக்கிறது. முஸ்லிம்களை பலிக்கடாவாக்கி முஸ்லிம்கள் மீது பாலி சுமத்தி தங்களுடைய அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்த வெளிநாட்டு சக்திகளும், உள்ளூர் சக்திகளும் சேர்ந்து செய்த மிகப்பெரிய சூழ்ச்சிதான் ஈஸ்டர் தாக்குதல். இதில் முஸ்லிம் சமூகம் பலிக்கடாவாக்கப்பட்டு கிறிஸ்தவ சமூகமும் மோசமாக பாதிக்கப்பட்டது. அது போன்றே தலைவர் அஷ்ரபின் மரணமும் பல மர்மங்கள் நிறைந்ததாக அமைந்துள்ளது. அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதனால் பல்வேறு காய்கள் நகர்த்தப்படும். இலங்கையர்களான நாம் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்.

அந்நிய சக்திகளின் பொறியில் மாட்டிக்கொண்ட இலங்கை போலவே வடக்கு கிழக்கில் அதிக முஸ்லிங்களை கொண்ட கேந்திர நிலையமான கல்முனையும் மாட்டிக்கொண்டுள்ளது. இவைகளையெல்லாம் பற்றி சிந்திக்காது கல்முனை நகரில் உள்ள சில மனநோயாளிகள் சம்பந்தமே இல்லாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள். கல்முனை மாநகரின் மகிமையை பாதுகாக்க மருதமுனையின் பங்களிப்பு அளப்பரியது. இந்த மனநோயாளிகளை பற்றி பேச இந்த இடம் போதாது. இவர்களை பற்றி பேச நிறைய பேச வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் அவர்களை பற்றி பேசலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ் பேராசியர்கள் தனது இனத்தின் வேட்கைக்காக மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு செய்து களப்பணி செய்வது போல முஸ்லிம் சமூகத்தில் முஸ்லிங்களை அரசியல் மயப்படுத்த பேராசியர் எம்.எம். பாஸீல் களத்தில் இருப்பதை காண்கிறேன். தனது மேற்கொண்ட ஆய்வுகளை கொண்டு சமூகத்தை பற்றி சிந்திக்கும் இலங்கை முஸ்லிங்களின் கல்வி ஆளுமை அவர். இப்படியானவர்களை முஸ்லிம் சமூகம் பயன்படுத்தி முஸ்லிங்களுக்கு எதிரான சவால்களை முறியடித்து தீய சக்திகளின் அஜந்தாக்களிலிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்து நமது ஒற்றுமையை பலப்படுத்த இளைஞர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *