நூருல் ஹுதா உமர்
ஆசிரியர்கள் மேய்ப்பாளர்கள் என்ற அடிப்படையில் என்றும் இறைவனிடத்தில் தங்களுடைய கடமைக்கு பொறுப்புச் சுமத்தப்பட்டு பொறுப்பு கூறுகின்றவார்களாக இருக்கின்றார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை வழிப்படுத்த வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றார்கள் அந்த மேய்ப்புப் பணியிலிருந்து ஆசிரியர்கள் தவறிவிட முடியாது. ஆனால் இன்று தமது கடமையைச் சரியாகச் செய்கின்ற ஆசிரியர்கள் கூட சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளையும், இன்னல்களையும் எதிர்கொள்கின்றனர் மாணவர்கள் ஆசிரியர்களுடைய வழிப்படுத்தலை உதாசினம் செய்வதனாலேயே பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன என அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ஆயிஸா பாலிகா மகா வித்தியாலயத்தில் பெரா சரிட்டி நிறுவனத்தின் ஏற்பாட்டில் “நற்பிரஜைகளாவோம்” எனும் தொனிப்பொருளான நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் திருமதி ஹாறுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீதிபதி ஹம்ஸா தொடர்ந்து உரையாற்றுகையில், ஆசிரியர்கள் மாணவர்களை நோக்கி கூறுகின்ற அறிவுரைகளை உள்வாங்காமல் வேறு சூழ்நிலை காரணங்களால் தூண்டப்பட்டு கல்வி நோக்கைவிட்டு வழி தவறிச் சென்று கொண்டிருக்கிறார்கள் இதனால் நல்ல நிலையில் இருக்கின்ற மாணவர்களும் இச் சிக்கலுக்குள் அகப்பட்டுக்கொள்கின்ற துர்ப்பாக்கிய நிலை தற்போழுது எழுந்துள்ளது. மாணவர்கள் கூடுதலான நேரத்தை ஆசிரியர்களுடன் பாடசாலையில் கழிக்கின்றார்கள் அந்த நேரப்பகுதியில் சட்டத்தின் பார்வையில் மாணவர்களின் பராமரிப்பும், கட்டுக்காவலும் ஆசிரியர்களிடத்திலும், அதிபரிடத்திலும் ஒப்படைக்கப்படுகின்றது இதனால் மாணவர்கள் மீது முழுப்பொறுப்பையும் கொண்டுள்ள ஆசிரியர்கள் பாடசாலையில் அவர்களை வளப்படுத்த வேண்டிய கடமையை புரிந்தேயாக வேண்டும் அண்மைக்காலமாக ஆசிரியர்கள், மாணவர்கள் தொடர்பான சிறுசிறு பிணக்குகளும், வழக்குகளும் நீதிமன்றத்திற்கு அங்கங்கே வந்துகொண்டே இருக்கின்றன. அதிலும் ஆசிரியர் மாணவனைத் தாக்கினார், மாணவன் ஆசிரியரைத் தாக்கினார் மற்றும் பாடசாலைகளில் ஏற்படுகின்ற மோதல்கள் என்பன நீதிமன்றம் வரை வருவது நாங்கள் எங்களை சுய பரிசோதனை செய்து எங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய விடயமாகும். ஸ்மாட் கைப்பேசிப் பாவனைகள் அதிகரித்துள்ளமையால் வருகின்றன பிரச்சினைகளும் தற்காலத்தில் அதிகரித்து காணப்படுகின்றது விசாரிக்கின்ற போது மாணவர்களும்,மாணவிகளும் தெரிவிக்கின்ற கருத்துக்களை பார்க்கின்றவேளை வியப்பாகவிருக்கின்றது.
எனது பார்வையில் மாணவர்கள் மத்தியில் தொலைபேசிப் பாவனை தடைசெய்யப்பட்ட ஒரு விடயமாகக் காணப்படுகின்றது. கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு கற்பிக்க வேறுவழியில்லாத சந்தர்ப்பத்தில் கைத்தொலைபேசிகள் சூம் இணையவழி கற்பித்தலுக்காக பயன்படுத்தப்பட்டன. இதனால் பயனடைந்த மாணவர்கள் இருந்தாலும் வழிகெட்டுப்போன மாணவர்கள்தான் அதிகம். அன்பான மாணவர்களே! நீங்கள் கைத்தொலைபேசிப் பாவனையை விட்டும் முற்றாக விலகியிருங்கள். கைத்தொலைபேசி உங்களது வயதுடன் நோக்கும் போது விரும்பத்தகாததொன்று அதனால் மாணவர்களடைந்த நன்மைகளை விட தீமைகளே அதிகம்.
படிக்கின்ற காலத்தில் மனதில் இலட்சியங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த இலட்சியத்தை அடைந்துகொள்ளக்கூடிய வாய்ப்புக்களை இனங்கண்டு அதனை நோக்கி நகரவேண்டும் பல அறிஞர்களைப்பற்றி பேசுகின்ற போது அவர்கள் தங்களது இலட்சியங்களை அடைந்துகொள்ள எடுத்துக்கொண்ட முயற்சிகளையும், அவர்கள் நிகழ்த்திய சாதனைகளையுமறிந்து அவ்வாறே நமது இலட்சியங்களை வெல்ல முயற்சி செய்து அதற்கமைய செயற்பட வேண்டும். நமது இலட்சியங்களை மறந்து வேறு சிந்தனைகளிலும் வீண் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதிலிருந்து நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும். பொருத்தமற்றவர்களுடனான தொடர்பு அறிமுகமில்லாதவர்களுடைய நட்பு மற்றும் கைத்தொலைபேசிப் பாவனை போன்றவற்றின் மீது நாம் கவனமாக இருக்க வேண்டும்.
நாம் சமூதாயத்தின் நல்ல நிலையை அடைந்து கொள்ள முன்மாதிரியானவர்களுடைய செயற்பாடுகளை பின்பற்றி நடக்க வேண்டும் இன்று பல துறைகளில் பெண்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். சமூதாயத்தில் உயர்ந்த அந்தஸ்திலிருக்கிறார்கள் இதுபோன்றே நாமும் இலட்சியத்துடன் பயணிக்கின்ற போது நமக்கு எதுவும் தடையாகவிருக்க முடியாது. இலக்கு நோக்கி பயணிக்கையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் அதனால்தான் “இலட்சியமில்லாத வாழ்வு அச்சாணியில்லாத தேருக்கு ஒப்பானதாகும்” யானையின் பலம் அதன் தும்பிக்கையில் மனிதனின் பலம் அவர்களின் நம்பிக்கையில் என்பார்கள் இலட்சியமும் நம்பிக்கையுமில்லாத மனிதன் நடைப்பிணத்திற்கு ஒப்பானவன் ஆகவே விடாமுயற்சியுடன் செயற்படுவீர்களானால் உங்களுடைய சமூதாயத்தை நீங்களே மாற்றியமைக்கக்கூடிய வல்லமையை நீங்கள் பெறுவீர்கள்.
சில நாடுகளில் நற்பிரஜைகளை உருவாக்க கைத்தொலைபேசிப் பாவனையை மாணவர்கள் மத்தியில் முற்றாக தடைசெய்திருக்கிறார்கள். காதல் என்ற தோறணையில் பசப்பு வார்த்தைகளைப்பேசி எமது மாணவர்கள் அந்த வலையில் வீழ்ந்து பல சீரழிவுகளைச் சந்தித்து வருகின்றனர்.அவ்வலையில் வீழ்ந்தவர்கள் புகைப்படங்களைப் பரிமாறி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதனால் குறித்த பெண்களின் குடும்பமே சமூதாயத்தில் இழிவாக பார்க்கப்படுகின்ற நிலமை உருவாகின்றது.
எனவே மாணவர்கள் கைத்தொலைபேசி பாவனையிலிருந்து முற்றாக விலகியிருப்பதன் மூலம் அவர்களையும், சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் பொதுவாக 14 தொடக்கம் 16 வயது பிரிவிலுள்ள பெண் பிள்ளைகள் கைத்தொலைபேசி தொடர்பான சிக்கலுக்குள் அகப்பட்டு இன்று நீதிமன்றங்களில் அலைந்து திரிவது கவலைக்குரியது. இவ்வாறான விடயங்களைப் பெற்றோரும், ஆசிரியர்களும் எடுத்துக்கூறியும் அவற்றை உணராத பிள்ளைகளே இன்று நீதிமன்றங்களில் காணக்கூடியதாகவுள்ளது இதுவே நிதர்சனமான உண்மையாகும்.
அண்மைக் காலமாக பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யப்போவதாக அச்சுறுத்தி பணம்பறிக்கின்ற இணைத்தளக் கள்வர்கள் அதிகரித்துக் காணப்படுகின்றார்கள் இன்று எத்தனையோ தந்தைமார் தங்களது மகள்மார்களின் புகைப்படங்கள் வெளிவந்துவிடக்கூடாது என்பதற்காக இலட்சக்கணக்கில் இவ்வாறான கள்வர்களுக்கு செலவு செய்கின்றார்கள் என்பது பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்
எனவே இவ்வாறான சீரழிவிலிருந்து விடுபட்டு இலக்கு நோக்கி பயணிப்பவர்களாக மாணவர்கள் மாறுகின்ற போது மேய்ப்பாளர்களுடைய பணியை இலகுவாக செய்யக் கூடியதாகவிருக்கும். நீங்கள் இங்கே சொல்லப்பட்ட அறிவுரைகளை எடுத்து நடக்கின்றபோது எனது மேய்ப்பாளர் என்ற கடமையை சரியாக செய்தவனாக என்னாலும் திருப்தியடைந்து கொள்ள முடியும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *