அஸ்வெசும பயனாளிகள் பட்டியலில் பெயர்கள் இடம்பெறாத அனைத்து விண்ணப்பதாரர்களும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு காலம் முடிவடைந்த பின்னர் தகுதியானவர்களின் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
“அஸ்வெசும” சமூக நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
பொருளாதார மீட்சி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டம் தொடர்பில் சமூகத்தில் சில தரப்பினர் மேற்கொள்ளும் தவறான பிரச்சாரங்களினால் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், பகிரங்கப்படுத்தப்பட்ட பட்டியல் இறுதி பட்டியல் அல்ல என்றும் தெரிவித்தார்.