அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியது செல்லாது என தொடரப்பட்ட வழக்கில் சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே பல வழக்குகள் நடைபெற்று ஒருவழியாக அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை உறுதி செய்து கொண்டார் எடப்பாடி பழனிசாமி. இதனை கொண்டாடும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற கோதாவுடன் அண்மையில் மதுரையில் மிக பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.
ஆனால் மதுரை மாநாடு மூலம் பெற்ற கெத்தும் மகிழ்ச்சியும் தொடருமா இல்லையா என்பது இன்று அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு உரிமை சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுமீதான விசாரணையில் தெரிய வரும். என்ன வழக்கு இது?
சசிகலா தம்மை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் சசிகலாவின் இந்த மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்திலும் சசிகலா மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்றம் வரை இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விரைவாக முடிவெடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில்தான் இன்று சென்னை உயர்நீதிமன்றம் சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கிறது.