தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் முழு ஆதரவு கிடைத்ததால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. பெங்களூருவில் நடிகர் சிவராஜ்குமார் தலைமையில் கன்னட திரையுலகினர் போராட்டம் நடத்தினர். காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து கர்நாடகாவில் செப்டம்பர் 29ம் தேதி மாநில முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஒருங்கிணைந்த கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அதன்படி நேற்று காலை 6 மணி முதல் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

பல மாவட்டங்களில் முழு ஆதரவு: மாநிலம் முழுவதும் வர்த்தக நிறுவனங்கள், சிறிய, நடுத்தர தொழிற்சாலைகள், கார்மென்ட்ஸ் கம்பெனிகள், திரையரங்குகள், பெரிய மால்கள் மூடப்பட்டிருந்தது. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டது. ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், தகவல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் இயங்கியது. அரசு மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக பஸ்கள், மெட்ரோ ரயில்கள் இயங்கியது. ஆனால் பயணிகள் வருகை குறைவாக இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது. பெங்களூரு, கலபுர்கி, தார்வார் மாநகரங்களில் உள்ள உயர்நீதிமன்றங்கள் உள்பட மாநிலம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களும் இயங்கியது.
ஆட்டோ, கார், ஓலா, ஊபர் ஆகிய வாகனங்கள் இயங்கவில்லை.

சரக்கு லாரிகள் மற்றும் மினி சரக்கு வாகனங்களும் இயங்கவில்லை. பெட்ரோல் பங்குகள் இயங்கியது. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ரயில், பஸ்களில் பெங்களூரு மாநகருக்கு வந்த பயணிகள் ஆட்டோ, டாக்சி வசதிகள் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பலர் பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து நடந்து சென்ற காட்சியும் காண முடிந்தது. கே. ஆர். மார்க்கெட், யஷ்வந்தபுரம், மல்லேஸ்வரம் உள்ளிட்ட மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்த இருந்தாலும் காலை 10 மணி வரை வியாபாரம் செய்தனர். பூக்கள் வியாபாரமும் நடந்தது. தமிழ்நாட்டில் இருந்து பெங்களூரு வரும் பஸ் சேவை நிறுத்தப்பட்டது. சுதந்திர பூங்காவில் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்தினர்.

கன்னட திரையுலகினர் ஆதரவு:

மாநில முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட திரையுலகம் முழுமையாக ஆதரவு கொடுத்தது. பெங்களூரு சிவானந்தா சர்க்கில் அருகில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தகசபை கட்டிட வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டது. நடிகர் சிவராஜ்குமார் தலைமையில் நடந்த போராட்டத்தில் நடிகர்கள் ஸ்ரீநாத், உபேந்திரா, விஜயராகவேந்திரா, லூஸ்மாத யோகிஷ், வினோத் பிரபாகர், நடிகைகள் உமாஸ்ரீ, சுருதி, பூஜாகாந்தி, ரூபிகா, அனுபிரபாகர், நடிகர்கள் சிக்கண்ணா, சுந்தர்ராஜ், காந்தராஜ், ரங்காயன ரகு, சீனிவாசமூர்த்தி உள்பட பல கலைஞர்கள், வர்த்தக சபை நிர்வாகிகள் மட்டுமில்லாமல் திரையுலகை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.

முழு அடைப்பு காரணமாக நேற்று பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் கார், டாக்சி, ஓலா, ஊபர் உள்ளிட்ட வாகனங்களின் சேவை இல்லாதால், விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பிற மாநிலங்களுக்கு செல்ல முன்பதிவு செய்திருந்தவர்கள் வர முடியாமல் பலர் பயணத்தை ரத்து செய்தனர். இதனால் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை உள்பட பல மாநிலங்களுக்கு இயக்க வேண்டிய 41 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனிடையில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். விமான நிலையத்தின் இரு முனையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

 

பெங்களூருவில் 785 பேர் கைது: முழு அடைப்பு போராட்டம் குறித்து பேசிய பெங்களூரு மாநகர காவல் துறை ஆணையர் பி.தயானந்தா, பெங்களூரு மாநகரில் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. சுதந்திர பூங்காவில் மட்டும் 1500 பேர் கூடினர். ஆனால் மாநகரில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட 785 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று பி.தயானந்தா தெரிவித்தார். போராட்டத்தால் ரூ.400 கோடி இழப்பு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடக் கூடாது என்று நேற்று நடைபெற்ற கர்நாடக பந்த் காரணமாக, வணிகம் மற்றும் தொழில் துறைகளில் அரசுக்கு ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக எப்கேசிசிஐ தலைவர் ரமேஷ் சந்திர லஹோட்டி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *