13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனும் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கியுள்ளார்.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதனிடையே, இலங்கை தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும் அந்த விடயம் சார்ந்த செயற்பாடுகளின் நிலைமை குறித்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் வேந்தன் ஆகியோர் இந்த சந்திப்பல் பங்கேற்றதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.