இந்து சமுத்திர வலயத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பங்குதாரர்களும் சாதகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற 20 ஆவது ஷங்ரிலா உரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
ஆசியாவின் பிரதான பாதுகாப்பு மாநாடுகளில் ஒன்றான Shangri-La Dialogue சிங்கப்பூரில் ஜூன் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை நடைபெற்றது.
ஜூன் 2ஆம் திகதி ஆரம்பமான இந்த மாநாட்டில் ஆவுஸ்திரேலியப் பிரதமர் அன்டனி அல்பனீஸ் தலைமையுரை ஆற்றியதோடு இந்தியா, ஓமான், பிரான்ஸ், பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
நிலையான மற்றும் சமநிலையான ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குதல், பிராந்திய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, ஆசியாவில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல், இந்து-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான புவிசார்-அரசியல் விவகாரங்கள் குறித்து இந்த உச்சிமாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்புச் செயற்பாடுளை மையப்படுத்தி உரையாற்றிய சாகல ரத்நாயக்க, இந்து சமுத்திர வலயத்தை அமைதி வலயமாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை மேற்கொண்ட முயற்சிகளையும் தெளிவுபடுத்தினார்.
பெரும் வல்லரசுகளின் போட்டி மற்றும் வெளி மோதல்களை இந்து சமுத்திரத்தில் இருந்து விலக்கி வைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், கப்பல் மற்றும் விமானப் பயண சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் இலங்கையின் பங்களிப்பை விளக்கினார்.
இதேவேளை, ஷங்ரிலா உரையாடலில் கலந்துகொண்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உட்பட பல உயர்மட்ட இராஜதந்திரப் பிரதிநிதிகளுடன் சாகல ரத்நாயக்க பேச்சுவார்த்தை நடத்தினார்.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்திய சாகல ரத்நாயக்க, கடந்த சவாலான காலகட்டத்தில் சிங்கப்பூர் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.