எதிரணிகளின் அரசியல் விமர்சனங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியிலும், சர்வதேச நாணய நிதியத்துடனான கொடுக்கல் வாங்கலை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றிகள் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கைக்கு கடன் வசதி வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” வங்குரோத்து நிலையை அடைந்த எமது நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதைவிட வேறுவழி இருக்கவில்லை. அதனால்தான் பொருளாதார மறுசீரமைப்புகள்கூட செய்யப்பட்டன.
இதற்கு முன்னரும் 16 தடவைகள் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளது. எனினும், வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இம்முறை கடனுக்கான அனுமதியை பெறுவது பெரும் சவாலாக அமைந்தது. இதற்கிடையில் சர்வதேச நிதி நிறுவனங்களும் தரவுபட்டியலில் இலங்கையை பின்னிலைப்படுத்தின.
இந்நிலையில் தான் இராஜதந்திர மட்டத்திலான நகர்வுகளைக் கையாண்டு இந்தியா, சீனா, ஜப்பான், பரிஸ் க்ளப் உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்போடு சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுக்கான அங்கீகாரத்தை ஜனாதிபதி பெற்றுள்ளார்.
இனி இலங்கையால் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு முன்னோக்கி செல்ல முடியும். நிதி நிறுவனங்களும் இலங்கை மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தும்.
அந்தவகையில் ஜனாதிபதிக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் நன்றிகள் என்றார்.