சுயாதீன ஊடகவியாலாளர்
இருளப்பன் ஜெகநாதன்
உங்கள் வாழ்க்கையே மாறப்போகுது ! ஒரு தடவை மீட்டிங் அட்டென்ட் பண்ணி பாருங்க ! நானும் உங்கள மாதிரி தான் பணக்கஷ்டத்துல இருந்தேன் ! இன்னைக்கு நான் சொந்த வீடு – கார் நல்ல வருமானம் கஷ்டமே இல்லாம பல இலட்சங்களை சம்பாதிக்கிறேன் ! அருமையான திட்டம் ! நான் சொல்றத விட பேசமா நீங்களே ஒரே ஒரு தடவை மீட்டிங் அட்டண்ட் பண்ணுங்க ! அப்புறம் பாருங்க ! உங்க வாழ்க்கை நீங்க நினைச்சி பார்க்க முடியாத உயரத்துக்கு போய்டும்.
இது போன்ற உற்சாகமூட்டும் வார்த்தைகளை உங்களிடம் எவரேனும் கூறினால் கவனம் ! நீங்கள் ஒரு திட்டமிடப்பட்ட ஒரு ஏமாற்று கும்பலிடம் சிக்கி உங்கள் பணத்தை இழக்க போறீர்கள் என்று அர்த்தம்.
இன்னும் கணித்துவிட முடியா வேறு பல பெயர்கள் கொண்ட நிறுவனங்களிடன் பங்குதார்கள் என்று உங்களை எவரும் அணுகக்கூடும். இது முழுக்க முழுக்க நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டு மக்களின் ஆசையை தூண்டி அதன் மூலம் அவர்களின் பணத்தையும் உழைப்பையும் சூட்சமமாக கபளீகரம் செய்யும் மாய வலை என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள்.
குளோபல் லைவ் ஸ்ரைல் லங்கா பிறைவேற் லிமிடெட் எனும் வர்த்தக நிறுவனம் பல காலமாக இலங்கை மத்திய வங்கியால் தடைசெய்யப்பட்டுள்ளமை எம்மில் எத்தனை பேர் அறிந்துள்ளனர்.
இதற்கு முன்னர் golden key, network marketing – இன்னும் பல பெயர்கள் (மத்திய வங்கி இணையதளத்தில் கண்டு கொள்லலாம்) இன்றும் இலங்கையில் எதோ ஒரு பிரதேசத்தில் பலரை ஏமாற்றும் வேலையை இவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். பணம் சம்பாதிக்கவேண்டும் அதுவும் வேகமாக குறுக்கு வழியில் சீக்கிரமே சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டர்வர்கள் இலகுவில் இவர்கள் வலையில் வாழ்வார்கள் வீழ்த்தப்படுவார்கள்.
இது எவ்வாறு நடக்கிறது ?
இலகுவாக பணம் சம்பாதிப்பது ! உழைப்பில்லாமல் குறுகிய வழியில் அதிக பணம் சம்பாதிப்பது ! ஆடம்பர வாழ்க்கை மற்றும் வாழ்க்கைத் தரத்தை விரைவில் அடைவது போன்ற யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட மக்களின் ஆசைகளே அவர்களின் முதலீடு.
எல்லா மனிதர்களின் தேவைகளும் ஒன்று தான் தரமான வாழ்க்கை ! சமுகத்தில் அந்தஸ்து ! என வாழ நினைப்பது அனைவரினதும் தார்மீக உரிமையும் ஆசையும் என்பது மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு மனிதனின் முயற்சி , திறமை ,அர்ப்பணிப்பு உழைப்பு நேரம் போன்றவற்றை பொறுத்தே அந்த கனவு சாத்தியப்படுகிறது.
எமது நாட்டில் உயர்வர்க்கம் – நடுத்தர வர்க்கம் – அதனிலும் கீழ்மட்டத்தில் உள்ள வகுப்பை சேர்ந்தவர்கள் உண்டு , இங்கே வகுப்பென்றும் வர்க்கம் என்றும் நாம் குறிப்பிடுவது அவர்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாய் கொண்டு மட்டுமே. மாதம் பூராக கடுமையாய் உழைத்து 1 இலட்சம் சம்பாதித்து வீடு வாடகை உணவு பிள்ளைகளுக்குரிய செலவுகள் போக எதுவும் சேமிக்க முடியாத பல குடும்பங்கள் உண்டு.
கோவிட் காலத்தில் பல நடுத்தர வர்க்கங்கள் அதனிலும் கீழ் மட்டத்துக்கு வீழ்ந்து போன சோகங்களும் உண்டு. எமது நாட்டில் நிலையற்ற பொருளாதார நிலை காரணமாக பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் அடுத்த கட்டத்தை எட்ட ஆயுள் முழுதும் போராட வேண்டிய துர்பாக்கிய நிலை உள்ளது.
திருட்டு கும்பலும் குறிவைக்கப்படும் நடுத்தர வர்க்கமும்
விடிந்தால் கட்டாயம் அடுத்த நாள் உழைப்பை பற்றிய தீவிர சிந்தனை சதா ஓட்டம் ! எவ்வளவு சம்பாதித்தாலும் மிச்சமில்லை ! விரக்தி – வருமானத்துக்கு ஏற்றால் போல ஈடுகொடுக்க முடியா விலைவாசி என உழைப்பிலேயே வாழ்க்கை முழுதும் ஓடிவிடுமோ எனும் அச்சம்.
உழைப்பதற்காகவே வாழ்க்கை என்ற கவலைக்குரிய நிலை. மகிழ்ச்சியாக குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்ய இயலாத நிலை அவர்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய ஓயாமல் பணத்தின் பின் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய ஒரு பொருளாதார அமைப்பை இதுவரை எம்மை ஆண்டவர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.
நாளை நாம் இறந்து விட்டால் குடும்பத்தின் நிலை என்ன என்ற கேள்வி குறி என ஒவ்வொரு நடுத்தர குடும்பங்களின் பொறுப்பை சுமப்பவரின் மனோ நிலை என்பதை அறிந்தோர் அறிவர். இங்கே சிலர் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலும் பெரும்பாலானவர்கள் இறுதி வரை நேர்மையான உழைப்பையே நம்பி இருக்கிறார்கள்.
பணம் படைத்தவன் இது போன்ற இதர வருமானம் ஈட்டும் தொழிலுக்கு வரப்போவதில்லை அத்தனையும் மீறி வந்தால் அவன் ஏமாற்ற பட்டால் அந்த ஏமாற்றம் அவருக்கு பெரும் பாதிப்பை அவருக்கு உருவாக்கிவிடப்போவதில்லை. அது குறித்து அவனால் போராட கூடிய வல்லமையும் ஆளுமையும் இருக்கும் எனினும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன் அப்படி அல்ல
யாதாயினும் ஒரு வகையில் ஒரு புதிய முயற்சியை செய்து அதிலே ஏமாற்றப்பட்டால் அதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கவோ அதற்காக நேரம் செலவழித்து போராடவோ ஒரு நடுத்தர வர்க்க மனிதனுக்கு நேரமும் இருக்காது அதற்கான பண பலமும் இருக்காது. மேலும் தான் ஏமாந்ததை வெளியில் சொல்ல பெரும்பாலானவர்கள் வெட்கப்பட்டு மௌனமாய் விலகிச்சென்றுவிடுகின்றனர். இழப்பின் வேதனையோடும் விரக்தியோடும் மௌனித்து விடுகின்றனர். அவனுக்கு நேரம் தான் வருமானம் இழந்த பலனத்தை மீட்க நேரத்தை செலவு செய்வது விடவும் பேசாமல் வேலையை பார்ப்போம் என்று பலர் மௌனமாய் இருந்து விடுகின்றனர்.
எனவே ஆபத்தில்லாத ஏமாற்றக்கூடிய மிக பொருத்தமான சந்தை நடுத்தர வர்க்க சந்தை தான் என்பது இந்த திருட்டு கும்பலின் தீர்மானம் – எனது ஆய்வில் கண்டு கொண்ட பலர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களே !
இவ்வாறு விரக்தியில் வாழ்த்து வரும் நடுத்தர வார்த்தையே இவர்கள் குறிவைப்பார்கள் ! TARGET MARKET என்று வணிக முகாமைத்துவதில் கூறுவதுண்டு.
ஆசையை தூண்டி தூண்டிலிடும் சாமர்த்தியர்கள்
மாதம் பூராக வேலை செய்து 1 இலட்சம் உழைத்து ஒரு ருபாய் மிச்சம் இல்லாமல் மீண்டும் அடுத்த மாதமும் அதே போராட்ட வாழ்வை சதா அனுபவித்து வரும் ஒருவரை அணுகி இவ்வாறு மூளைச்சலவை செய்வர்
நீங்கள் வேளைக்கு வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி இந்த திட்டத்தில் இணையுங்கள் உங்களுக்கு வீட்டில் இருந்த படி பணம் வந்து சேரும் அதுவும் 50 ஆயிரத்தில் துவங்கி அதிகரித்து கொண்டே போகும் ! அப்படிப்பட்ட அபாரமான திட்டம் .
பணம் தேவையான அளவு கொட்டி கிடக்கிறது, கிள்ளி எடுப்பதும் அல்லி எடுப்பதும் உங்கள் விருப்பம். இந்த வசனத்தை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குமே! ஆமாம் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தை பாருங்கள் ஒரு தெளிவு பிறக்கும்.
உங்களை போல தான் நானும் அடுத்த வேலை சாப்பாட்டை தேடவே நாய் படாத படுபட்டன். என் நண்பன் இந்த திட்டத்தில் சேர்த்து விட்டான். இப்ப எனக்கு சொந்த கார் – வீடு என்று செட்டில் ஆகி விட்டேன்- உழைக்க தெரியாதவன் இத பத்தி ஆயிரம் சொல்லுவான் உங்கள மாதிரி கடுமையான உழைப்பாளிகளுக்கு இது பொருத்தமான திட்டம்.
நீங்க ஒரு நாளைக்கு 10 மணித்தியாலயம் உழைக்கிறீங்க – இப்படி மாதம் பூரா உழைச்சு உங்க குடும்பத்தோடும் பிள்ளைகளோடும் எத்தனை மணி நேரம் செலவு செய்ய முடியுது ? சரி அப்படி என்றால் மாதம் எத்தனை ரூபாய் சேமிப்பு இருக்கு ! இப்ப புரியுதா கடைசி வரைக்கும் இப்படியே உழைச்சிட்டே இருக்க வேண்டியது தான். நம்ம நாட்டு சிஸ்டம் அப்படி ! ஒரு PRODUCTஐ வாங்கி MEMBER ஆகுங்க அப்புறம் நீங்க ஒரு 5 MEMBERS அறிமுகம் செய்ங்க அப்புறம் அவங்க ஒரு 5 இப்படின்னு உங்க நெட்ஒர்க் பெருசாகிட்டே போகும் உங்களுக்கே தெரியாத பலர் உங்க டீம் ல JOIN பண்ணி உங்களுக்கு மாசம் மாசம் 1 இலட்சத்துல துவங்கி பல இலட்சம் கமிஷன் எடுத்து தருவாங்க. வைத்தியர்கள் சட்டத்தரணிகள் மதகுருமார் விரிவுரையாளர்கள் என எங்க டீம்ல இல்லாதவங்களே இல்ல.
நான் இந்த திட்டத்தைப்பத்தி UK படிச்சி SPECIAL TRAINING எடுத்த இருக்கேன். இந்த திட்டத்துல நீங்க புதுசா யார் அறிமுகம் செய்யணும் என்றாலும் எங்க MEETING அட்டென்ட் பண்ண வைங்க நீங்க பெருசா விளங்க படுத்தTRY பண்ணாதீங்க ஏன் என்றால் இதுக்கென்று TRAINING பண்ணப்பட்ட எங்க PROFFESSIONALS இருக்காங்க அவங்க சிறப்பா விளங்கப்படுத்துவங்க.
இப்படி தான் ஆரம்ப அறிமுகங்கள் இருக்கும். இதற்கிடையில் நன்றாக உழைக்கலாம். பங்குதாரர்களாக இணையலாம் நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு வர்த்தக முன்னேற்றப்புள்ளிகளுக்கும் உங்களைத்தேடி பெருமளவு பணம் வந்து சேரும் – என உற்சாககமான பேச்சு MOTIVATIONAL SPEECH, Systematic approach based on the person. நீங்கள் வாழ்நாள் முழுதும் காசு பின்னால ஓடுறீங்கள் இந்த திட்டத்துல காசு உங்க பின்னாடி தொறத்திட்டு வரும் !
பிரபல்யமான விடுதி அரங்குகளில் – கருத்தரங்குகள் -உழைப்பால் உயர்ந்தோர் என சித்தரிக்கப்பட்ட காணொளிகள் – உயர்ரக கார்கள் நிறுத்தப்பட்டு இவை இவர்களோடு இணைந்து கொண்ட உறுப்பினர்கள் உழைத்து வாங்கியவை என்ற பொய்யான தகவல்கள் – அதற்கு உணர்ச்சிகளை தூண்டக்கூடிய வாசகர்களோடு கரகோஷங்கள் – கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு சுவையான உணவு – இப்படி நீண்டு கொண்டே போகும் இவர்களின் பொய் மூட்டைகள் கொண்டு வடிமைக்கப்படும் மாய வலை. பெரும்பாலும் இவர்களின் கருத்தரங்குகளில் உங்கோளோடு பக்கத்தில் இருந்து கொண்டு கைதடவதும் கேள்வி கேட்பது – இதில் இணைந்த பின்பு பெரும் பணக்காரனாக மாறிவிட்டேன் என்றெல்லாம் வாக்குமூலம் அளிப்பவர்கள் எல்லாம் இந்த நிறுவனத்தால் கூலி கொடுத்து பணிக்கு அமர்த்தப்பட்டவர்களே. அவர்கள் வேலையை அவர்கள் கச்சிதமாக செய்து விட்டு போவார்கள்..
இலங்கை முழுவதும் தனது கிளைகளைப் பரப்பி தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் இந்த நிறுவனம் 2005ஆம் ஆண்டு 85- சட்ட கோவையின் பிரகாரம் தடை செய்யப்பட்ட பிரமிட் வர்த்தகத்தை ஒத்த நிதி கபளீகர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
யார் மூலம் உங்களை அணுகுவார்கள்
இந்த கொள்ளைக் கூட்டத்தின் திட்டத்தில் அறியாமல் மாட்டிக்கொண்ட ஒருவரே உங்களையும் இதில் இணைக்க வைப்பார். ஒரு வேளை அவர் உங்கள் பால்ய சிநேகிதர் உறவினர் பக்கத்து வீடு காரர் உடன் வேலை செய்யும் நண்பர் உறவினர் போன்றோராகவே இருக்க வாய்ப்புண்டு.
அவர்கள் வலையில் சிக்கியவர்கள் என்பதை அறியாமலேயே உங்களையும் அவர்கள் இணைக்க முற்படுவர் எனவே அழைப்பை நிராகரிக்கவோ – சந்தேகம் கொள்ளவோ – துருவி ஆராயும் எண்ணமோ எமக்கு இலகுவில் தோன்றாது இதுவே அவர்களின் வெற்றியின் முதல் கட்டம் – இதுவே நாம் ஏமாற்றப்படுகின்ற முதல் கட்டம் !
ஏனெனில் நாம் நன்கு அறிந்தவர் மூலமாக சொல்லப்படும் விடயங்களுக்கு ஒரு அளவேனும் முக்கியத்துவம் கொடுப்போம் அதிலும் அவரும் அந்த திட்டத்தில் இணைந்து பலன் பெறுவதை அவர் உறுதி செய்வார்.
ஒரு வேளை இக்கும்பலின் மாய வலையில் சிக்கி தான் ஏமாந்தமை அறியாமலேயும் அதில் ஆழமாக ஈர்க்க பட்டமையினாலும் அவர் உண்மை அறியாமலே உங்களையும் இத்திட்டத்தில் இணைக்க முற்படலாம் அல்லது தான் ஏமாந்து ஒரு பொருளை வாங்கி விட்டோம் எனவே அதை ஈடு செய்வதற்காக வேணும் உங்களை அப்பொருளை கொள்வனவு செய்ய வைக்க முற்படலாம். எது எப்படி இருந்தாலும் பொருள் விற்பனை செய்யப்பட்டு விட்டது ! இலாபம் நீங்கள் நேரில் பார்க்காத யாரோ ஒரு கும்பலுக்கு போய் சேர்ந்தும் விட்டது.
வலையில் வீழ்ந்தவர்கள் அல்லது வீழ்த்தப்பட்டவர்களின் நிலை
ஒரு நடுத்தர வர்க்கத்துக்கு 1000 ருபாய் கூட பெரிய தொகை தான் எனினும் யாதாயினும் ஒரு தயாரிப்பை வெளியே இது 2 இலட்சம் விலை போகின்றது எமது நிறுவனத்துக்கு இது 30 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது என்று கூறி அது பற்றிய ஒரு பொய்யான தகவலையும் கூறி உங்களை வாங்க வைத்து விடுவார்கள் நீங்களும் வாங்கி விடுவீர்கள்.
அந்த பொருள் உங்களுக்கு எந்த வகையிலும் அவசியமானதாக இருக்காது. என்றாலும் நீங்கள் வாங்கு வீர்கள் – நீங்கள் வாங்குகின்ற மனா நிலைக்கு ஆளாக்க படுவீர்கள்.
இதனை வாங்குவதா இல்லையா என்று நீங்கள் யோசித்து கொண்டு இருக்கும் போதே – உங்கள் பக்கத்தில் ஒருவர் தொலைபேசியில் தனது மனைவியிடம் இவ்வாறு பேசுவதை நீங்கள் செவி மெடுப்பீர்கள்.
பரவால்ல ! நீங்க அந்த தாலி சங்கிலிய அடகு வச்சு சரி காச ரெடி பண்ணுங்க நான் இப்ப வரேன் ! நான் இப்பவே ரொம்ப லேட் 3 மாசத்துக்கு முன்னம் சேர்ந்த என் நண்பன் இப்ப புதிய கார் வாங்கிட்டான்.
ஆனால் இதுவெல்லாம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் என்பதை நீங்கள் அறிய மாடீர்கள் நடிப்பு அவ்வளவு தத்ரூபமாக இருக்கும்.
அதன் தரம் , அதன் உற்பத்தி நாடு , அதன் பாவனை உத்தரவாதம் என இதைப்பற்றிய தேடலும் உங்களுக்குள் இருக்காது ஏனெனில் நீங்கள் அவர்களது வசீகர பேச்சில் மயங்கி – வாழ்க்கை தரம் அதி வேகமாய் உயரப்போகிறது என்ற சித்தரிக்கப்பட்ட மாய உலகத்தின் போதையில் இருப்பீர்கள் அந்த போதை தெளியும் முன்னர் அவர்கள் உங்கள் மூலம் சுரண்டக்கூடிய அதிகபட்ச சுரண்டலை சுரண்டி முடித்து இன்னுமொரு பிரதேசத்துக்கு வேறு ஒரு பெயரில் இதே பணியை செய்ய அவர்கள் போய் இருப்பார்கள்.
இறுதியில் உங்களுக்கே தெரியாமல் நீங்கள் அவர்களிடம் பெரும் தொகை கொடுத்து சாதாரண பொருட்களை கொள்வனவு செய்து விடுவீர்கள் – இன்னும் பலரை வாங்கவும் செய்து விடுவீர்கள்
ஈற்றில் குறித்த ஒரு நிறுவனத்துக்காக நீங்கள் பொருளும் வாங்கி பலரை வாங்கவும் வைத்து இருப்பீர்கள் – உங்களுக்கோ உங்களால் அறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கோ எந்த இலாபமும் கிட்டி இருக்காது பொருளை விற்றவனை தவிர !
இந்த கும்பலில் சதியில் மாட்டிக்கொள்ளாமல் காத்துக்கொள்வது எப்படி
முதலே கேள்வி கேளுங்கள் எங்கெல்லாம் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மீட்டிங் அட்டண்ட் பண்ணி பாருங்க – உங்க வாழ்க்கையே மாறும் என்று சொன்னால் ! நிச்சயம் அது ! இந்த கூட்டம் தான் !
அவர்களின் திட்ட வரைபை எழுத்து மூலம் கேளுங்கள் அதனை மத்திய வங்கியில் காண்பித்து உறுதி படுத்தி பின்னர் மீட்டிங் அட்டண்ட் பண்றேன் என்று சொல்லுங்கள் – இதற்கு அவர்கள் தயங்கினாலோ – தாமதித்தாலோ – மறுத்தாலோ – சந்தேகமே வேண்டாம் – தமிழில் உள்ள நல்ல மிக உயர்ந்த வார்த்தைகளை தேர்ந்தெடுத்து திட்டி தீர்த்து விடுங்கள் ! பல ஏழை குடும்பங்களின் மொத்த உழைப்பையும் சூறையாடியவர்களை காட்டி சமூகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்ட என்னவெல்லாம் செய்ய முடியுமா அத்தனையும் செய்து விடுங்கள்.
நிறுவனத்தின் மத்திய வங்கியால் அளிக்கப்பட்ட அங்கீகார பத்திரம் பதிவு சான்றிதழ் என சில சான்றிதழை திரையில் காண்பிப்பர்- அவை நிச்சயம் போலியானவை அல்லது இந்த நிறுவனத்துக்கும் அவர்கள் செயல்பாட்டுக்கும் சம்பந்தப்படாதவை. எவரும் அது குறித்து ஆழமாக விசாரிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் நடத்தும் நாடகம் அது.
அதன் பிரதியை கேளுங்கள், தயங்காமல் தருகின்றனரா என்று பாருங்கள் – தயங்கினாலோ தடுமாறினாலோ அது குறித்து மாறுபட்ட விளக்கங்கள் தர முற்பட்டாலோ நிச்சயம் இவர்கள் கொள்ளை கும்பல் தான் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மீறி அதன் பிரதியை தந்தால் அதனை தனிநபர் வியாபார பதிவு செய்யும் திணைக்களத்தில் பரீட்சியுங்கள் – மத்திய வங்கியில் பரீட்சியுங்கள் – அதற்காக தான் இதன் பிரதியை கேட்பதாக பகிரங்கமாக சொல்லுங்கள் – அவர்களின் பதில் முகபாவனை – தடுமாற்றம் அனைத்தையும் உற்று கவனியுங்கள் – உங்களுக்கு நிச்சயம் அவர்கள் போலி முகம் வெட்ட வெளிச்சமாய் தெரியும்.
ஏனெனில் -முன் கூட்டியே – MIND SETTING செய்யப்பட்டு உல்லாச வாழ்க்கைக்கு ஆசை காட்டப்பட்டு போதை ஏற்றப்பட்ட ஆட்டு மந்தைகள் என்று தான் உங்கள் அனைவரையும் அவர்கள் கணித்து வைத்திருப்பார்கள்.
நல்ல திட்டம் இணைந்து கொள்ள ஆசையாக இருக்கிறது என்றும் -ஆனாலும் பங்குதாரர் ஆகப்போகின்ற நிறுவனத்தில் உண்மை தன்மை குறித்து உறுதிப்படுத்தி கொள்ளும் தார்மீக உரிமை உங்களுக்கு உண்டு என்று சொல்லுங்கள்.
உங்கள் கேள்விகள் அவர்களுக்கு ஆச்சரியத்தையும் அசாமானிய அச்சத்தையும் உண்டு பண்ணும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் பொய் ஒன்றை மறைக்க மீண்டும் பல பொய்களின் துணையை தேட வேண்டும்.
ZOOM மற்றும் WHATSAPP இணையும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் – ஒரே நேரத்தில் இணைந்துள்ள போதிலும் நீங்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளவோ – கேள்வி கேட்கவோ இயலாது – அதில் குறித்த சில அங்கத்தவர்கள் மட்டுமே பேசவும் கேள்வி கேட்கவும் அவர்கள் பணம் ஈட்டி வெற்றி பெற்ற அனுபவத்தையும் சொல்ல முடியும். நாம் நினைப்போம் அவை உண்மை என்று அனால் அப்படி அல்ல -கதையே வேறு – அவர்கள் சித்தரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் படி நடித்து விட்டு செல்வர் OUTSOURCE PERSONS அவர்கள் அனைவரும் முன் கூட்டியே இக்கொள்ளை கும்பலால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள். அவர்கள் அதில் அவ்வாறு செய்ய கூலி கொடுக்கப்படும். அவர்களுக்கும் இந்த கும்பலுக்கும் இடையில் உள்ள DEAL அவ்வளவே. நீங்கள் ஏதும் சிக்கலான விஷயத்தை MESSENGER இல் பதிந்தால் நீங்கள் அந்த GROUP CALL இல் இருந்து உடனே வெளியேற்றப்படுவீர்கள்.
90 வீதத்துக்கு மேற்ட்பட்ட எழுத்தறிவு வீதம் உள்ள மக்களை கொண்ட எமது நாட்டில் பலர் இவ்வாறு மோசடி கும்பலின் சூழ்ச்சி வலையில் வீழ்வது ஆச்சரியமாக உள்ளது?
ஏமாந்த பலர் மௌனமான விலகி இருப்பீர்கள் ! சிலர் ஆரம்பத்திலே அறிந்து கொண்டு விலகியும் இருப்பீர்கள் -எனினும் இன்னுமே ஏமாற்றப்பட்டு கொண்டும் இனினிமேலும் ஏமாறப்போகும் மக்களுக்கு நாம் சொல்லும் செய்தி இது .
மத்திய வங்கி என்னதான் தடை செய்தாலும் வேறு பெயர்களிலில் வேறு வடிவங்களில் புதிதாக முளைத்து கொண்டு தான் இருக்கிறார்கள்
எனவே உழைப்பையும் உங்கள் திறமையும் நம்பி முன்னேற வேண்டும் என்ற சிந்தனையில் செயல்படுவதால் மட்டுமே இது போன்ற மாயவலையில் இருந்து தப்பிக்க இயலும்.
ஏனெனில் அடுத்தவர் உழைப்பை சுரண்டி பணத்தை அள்ளும் இலகுவான முறையை கற்று வைத்தவர்கள் அறிந்து தெளிந்து தெளிவாக திட்டம் போட்டு நிதானமாக மக்கள் உழைப்பை அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் விருப்பத்துடன் சுரண்டி எடுக்கும் மாய காலையில் கைதேர்ந்தவர்கள்.
சக மனிதனை ஏமாற்றி பிழைக்கிறோமே அவன் குடும்ப நிலை என்ன ஆவது இந்த பாவ காசில் என் குடும்பத்தை வாழவைப்பது எனக்கு பாவம் இல்லையா என்ற குற்ற உணர்ச்சி துளி கூட இல்லாதவர்கள்.
இவர்கள் பசிக்கு திருடுபவர்கள் அல்ல ருசிக்கு திருடுபவர்கள் அறிந்து தெரிந்து திட்டம் போட்டு நிதானமாக காய் நகர்த்துபவர்கள் இவர்களிடம் மனிதாபிமானம் மனசாட்சி பண்பு எல்லாம் இருக்காது – இவர்களிடம் சிக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு பலி ஆடு அவ்வளவே !
ஆயிரம் ரூபாயில் அரை நாள் ஓட்டு கின்ற ஒரு மனிதன் இவர்களிடம் மாட்டினால் நிலை என்ன ! எனவே இந்த கட்டுரை படிப்பவர்கள் அனைவரிடம் இது பற்றி பகிருங்கள் நாம் விழிப்புடன் இருப்பதே எம்மை காத்துக்கொள்ளும் ஒரு வழி.
உங்களை எவரேனும் அணுகினால் பொருளாதார நிபுணர் ஒருவரின் ஆலோசனை கேட்டு விட்டு இணையுங்கள் – மத்திய வங்கியை அணுகுங்கள் அது ஒன்றே உங்களை பாதுகாக்க போதுமான முன்னெச்சரிக்கை ஆகும்.
நன்றி
சுயாதீன ஊடகவியாலாளர்
இருளப்பன் ஜெகநாதன்