முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான பல்வேறு ஏற்பாடுகளை இலங்கை அண்மைக்காலங்களில் மேற்கொண்டுள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
“இலங்கை பொருளாதாரத்தின் மீள் கட்டமைப்பு மற்றும் ஜப்பான் தொழில் வாய்ப்புக்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் டோக்கியோ நகரில் இன்று (26) இடம்பெற்ற வர்த்தக வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையிலான வர்த்தக தொடர்புகளை பலப்படுத்தும் நோக்கில் ஜப்பானிலுள்ள இலங்கை வர்த்தக சம்மேளனம் (JETRO) மற்றும் இலங்கை தூதரகம் ஆகியன இணைந்து மேற்படி மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கையிலுள்ள புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகள் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல் மற்றும் திறந்துவிடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், புதிய வெளிநாட்டு வர்த்தகங்களை ஈர்ப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் என்பன தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.
வர்த்தகச் செயற்பாடுகளில் இலங்கைக்கு அத்தியாவசியமான நட்பு நாடாக ஜப்பான் விளங்குவதாகவும், இருநாட்டு உறவுகளையும் பலப்படுத்திக்கொள்வதால் பல்வேறு பயன்களை ஈட்டிக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கையின் அமைவிடம் மற்றும் நாட்டிலுள்ள திறன் விருத்திமிக்க தொழிற்படையின் காரணமாக ஜப்பானிய நிறுவனங்கள் வலயத்திற்குள் தங்களது முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கான கதவுகள் திறக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை இந்த வட்டமேசை மாநாட்டில் கண்டுகொள்ளக்கூடியதாக இருந்தமை சிறப்பம்சமாகும்.
அதனையடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை – ஜப்பான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்துடனான சந்திப்பொன்றிலும் கலந்துகொண்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜப்பானிய டிஜிட்டல் மயமாக்கல் அமைச்சர் டாரோ கோனோ (Taro Kono) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றிருந்து.
இதன் போது டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகளுக்கான முனைப்புகள் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்தியிருந்ததோடு, டிஜிட்டல் முறைமைக்கு மாறுவதற்கான வேலைத் திட்டங்களின் போது இரு நாடுகளினதும் தொடர்புகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர் ட்ரான் லூ குவாங் (Tran Luu Quang) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்றும் டோக்கியோ நகரில் நடைபெற்றது.
இதன்போது இருதரப்பு உறவுகள் மற்றும் கலாசார தொடர்புகளை பலப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.