உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், கடந்த காலங்களில் செலுத்தப்பட்ட உயர் ஓய்வூதிய நிதிய விகிதத்தையும் எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பானது நாட்டின் வங்கிக் கட்டமைப்பு அல்லது எந்தவொரு அரச அல்லது தனியார் வங்கியின் ஸ்திரத்தன்மையையும் பாதிக்காது. நாட்டில் உள்ள 50 மில்லியனுக்கும் அதிகமான வங்கி வைப்பாளர்களின் வைப்புத்தொகைக்கு எதுவித பாதிப்பும் எழாது என்றும், தற்போது வங்கி வைப்புத்தொகைக்கு செலுத்தப்படும் வட்டியையும் அது பாதிக்காது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் விசேட அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டச் செயலாளரின் நிர்வாக கட்டிடத் தொகுதியான ‘லக்சியனே மாளிகையை’ மக்களிடம் கையளிக்கும் நிகழ்வின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.