சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமது கட்சியால் – தொழிற்சங்கத்தால் வருடாந்தம் பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் பிரதான மேதின பேரணியும், கூட்டமும் இம்முறை நடத்தப்பமாட்டடாதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
எனினும், தோட்டவாரியாக மிகவும் எளிமையான முறையில் மேதின நிகழ்வுகளை நடத்துமாறு தோட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடக்கூட்டம் கொட்டகலையில் உள்ள சி.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று (28) கூடியது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பி. உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி மே தினக் கூட்டத்துக்காக செலவிடும் பணத்தை, மலையக மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தோட்டவாரியாக நடத்தப்படும் மேதின நிகழ்வுகளின்போது, தோட்ட நூலகத்துக்கு நூல்களை வழங்குதல் உட்பட கல்விசார் விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவது ஏற்புடையது எனவும் தலைவர், தலைவிமார்களுக்கு கட்சி மேல்மட்டத்தால் அறிவிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கட்சியின் பிரதி தவிசாளர், பிரதி தலைவர், உப தலைவர்கள், தேசிய அமைப்பாளர், பிரதி தேசிய அமைப்பாளர்கள், முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள், தொழிற்சங்க மாநில பணிப்பாளர்கள், காங்கிரஸ் பணிமனை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஊடக செயலாளர்