யாழ். நெடுந்தீவில் வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட ஐவரில் ஒருவரது இறுதிக்கிரியைகள் இன்று (26) நடைபெற்றன
நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட ஐவரில் ஒருவரான சுப்பிரமணியம் மகாதேவாவின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன.
75 வயதான சுப்பிரமணியம் மகாதேவா ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார்.
கிளிநொச்சி – கணேசபுரத்திலுள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் திருநகர் பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, இந்த கொலைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 09 ஆம் திகதி சந்தேகநபரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொலைகள் இடம்பெற்ற வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவிலுள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஐந்து முதியவர்கள் கடந்த 22 ஆம் திகதி கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலைகள் தொடர்பில் 51 வயதான சந்தேகநபர் கடந்த 23 ஆம் திகதி புங்குடுதீவில் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரின் வாக்குமூலத்தின் பிரகாரம், கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும், கொலை செய்யும்போது சந்தேகநபர் அணிந்திருந்ததாகக் கூறப்படும் சாரமும் கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தன.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 51 வயதான சந்தேகநபர், கடந்த 25 வருடங்களாக ஜெர்மனியில் வசித்து வந்த நிலையில் , கடந்த 2019 ஆம் ஆண்டு நாடு திரும்பியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.