கிழக்கு கடற் பரப்பில் ஏராளமான கடலுணவு சார்ந்த வளங்கள் காணப்படுகின்ற போதிலும், இதுவரையில் அவை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒலுவில் துறைமுகத்தில் மீன்பிடிச் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் குறித்த குறைபாட்டினை கணிசமானளவு நிவர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
கிழக்கிற்கான விஜயத்தினை கடற்றொழில் அமைச்சர் விரைவில் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ள நிலையில், ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான ஏற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பாக இன்று(21.08.2023) சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டமையினால் அயல் கிராமங்களில் கடலரிப்பு அதிகரித்துள்ளதாகவும், துறைமுகத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுமாயின், கடலரிப்பு வேகம் மேலும் அதிகரிக்கலாம் எனவும் சில தரப்புக்களினால் அச்சம் வெளியிடப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயம் தொடர்பாக ஆய்வு ரீதியான அறிக்ககைளை பெற்று, அதனடிப்படையில் வேலைகள் ஒழுங்குபடுத்தப்படுவதுடன், பிரதேச மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டியதும் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப் பிரிவு:- கடற்றொழில் அமைச்சர்