இலங்கையை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு மாத்திரமின்றி எதிர்காலத்தில் போட்டித்தன்மை மிக்கதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவற்கும் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் மிகவும் அவசியமானதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்த முயற்சிகளின் பலனாக எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் வங்குரோத்து நிலையிலிருந்து நாடு மீண்டுவிடும் என நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி அதற்கான வேலைத்திட்டங்களுடன் அனைவரும் ஒன்றுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை பணிப்பாளர் சபையின் கலந்துரையாடல் ஒன்றின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.
கடன் நீடிப்பு முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அதுகுறித்து அமைச்சரவை, வங்கியாளர்கள், வணிக சபை உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.