மருத்துவர்கள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரால் வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாகரீகமற்ற நடத்தை கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்(GMOA) இந்த விடயத்தில் உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

அரச மருத்துவர் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே கையொப்பமிட்டு அனுப்பியுள்ள இந்தக் கடிதத்தில்,

தங்களது அண்மைக்காலத்தைய நாகரிகமற்ற செயற்பாடுகள் தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் இயங்கும் எமது கிளைகளில் இருந்து தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.

இந்தத் தகவல்கள், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு கிளைகளில் இருந்தும் தனிப்பட்ட நபர்களாலும் குறிப்பாக நிர்வாகத் தரத்திலுள்ள உத்தியோத்தர்களாலும் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளன.

ஆளுநரின் இவ்வாறான நடத்தையானது கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தர வைத்தியர்களிலும் திருப்தியற்றதும் விரும்பத்தகாததுமான சூழலை உருவாக்கியுள்ளது.

கடைசியில் இது சிறந்த சேவையைப் பெற்றுக் கொள்வதில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை தீர்க்கும் வகையில் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் தலையீட்டை கிழக்கு மாகாணக் கிளை வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், தமது அங்கத்தினர் மீதான ஆளுநரின் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடருமானால் தாம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கப் போவதாக கிளைகள் எச்சரித்துள்ளதாகவும் ஆளுநரால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களைப் பகிஷ்கரிப்பதில் இருந்து இது ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த பின்னர், கிழக்கு மாகாண வைத்தியர்கள் மீதான உங்களது நடத்தைகளை மீளாய்வு செய்யுமாறு தங்களை வேண்டிக் கொள்வதற்கு தமது நிறைவேற்றுக் குழு ஏகமனமாக முடிவெடுத்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆளுநருக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தாங்கள் எவ்வித சாதகமான முன்னெடுப்புக்களையும் எடுக்காவிட்டால் உங்களது எதிர்கால செயற்பாடுகளுக்கு எதிராக கிழக்கு மாகாணக் கிளை முன்னெடுக்கும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு நாம் பக்கபலமாக இருப்போம் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு முன்னர் காத்தான்குடி கல்வி வலய அதிகாரி ஒருவர் இடமாற்றப்பட்டது தொடர்பில் கிழக்கு மாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் நஸீர் அஹமதும் ஆளுநரை கண்டித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *