இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் மீண்டும் பிரவேசித்து வருவதாகவும், அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டில் காணப்பட்ட அரச வங்குரோத்து நிலைமை வீழ்ச்சியடைந்த இலங்கையின் பொருளாதாரத்தை 8 மாதங்களில் மாற்றியமைத்து வெற்றிகரமாக மாற்ற முடிந்ததாகவும், அது ‘Srillnka comeback story ’ என அழைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை இன்று (26) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் ஜனாதிபதி விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் 16 தடவைகள் உடன்படிக்கைகளை மேற்கொண்ட போதிலும், அந்த உடன்படிக்கைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையால் தோல்வியடைந்ததை ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்வதை தவிர வேறு மாற்றுவழி நாட்டில் இருக்கவில்லையென்பதால் தற்போதைய பலவீனங்களை ஒதுக்கி புதிய திட்டத்தில் 17ஆவது தடவையாக இணைய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் பாதுகாப்பிற்கான சமூக பாதுகாப்பு வலையமைப்பை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதியின் முழுமையான உரை,
பொருளாதாரம்,நிதி நெருக்கடி மற்றும் ஜ.எம்.எவ். குறித்து ஊடகங்களிலும், வேறு பல இடங்களிலும் கேள்வியெழுப்பப்பட்டிருந்தன. 2022 ஜூலை மாதத்தில் இருந்த கலவரம் , தீ வைப்பு, அரசாங்கத்தின் வங்குரோத்து நிலை இவற்றினால் இலங்கை மீதிருந்த நம்பிக்கை முழுமையாக இல்லாமல்போனது.
தற்போது எட்டு மாதங்களின் பின்னர் எமது பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ளதன் மூலம் இலங்கை சிறப்பான வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்று Srillnka comeback story ’ என்று கூறப்படுகிறது. வீழ்ந்திருந்த இலங்கை மீண்டும் சரியான பாதைக்கு வந்து மீண்டெழுந்துவருகிறது. இதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முழு நாட்டினதும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.
உடன்படிக்கை தவிர எமக்கு வேறு எந்த மாற்றுவழியும் இல்லை. மாற்றுவழிகள் எதுவும் முன்மொழியப்படவும் இல்லை. வேறு மாற்றுவழி இல்லாவிட்டால் இதனை நாம் அங்கீகரிக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து இதனை அங்கீகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறேன். ஜ.எம்.எவ். 6 மாதத்திற்கு ஒரு தடவையே எமது நாட்டுக்கு வருகிறது. குறைபாடுகள் இருந்தால் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கலாம்.
தேசிய பேரவை போன்று பல குழுக்கள் உள்ளன. முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்ற வேண்டும். அதற்காக நாம் உழைக்க வேண்டும். இது தொடர்பில் பல கருத்துகள் இருக்கலாம். அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும். பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். அனைவரும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.