சரியான பொது முடிவுகளை எடுக்கும் போது அதற்கு நிபந்தனையின்றி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் இன்று (13) நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
“அரசியல் களத்தில் சொல்வது ஒன்று செய்வது ஒன்றுமாகவே காணப்படுகின்றது.
அதற்கு மாறாக சொல்வதை செய்யும் கலாச்சாரம் உருவாகினால் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்.
எதிர்கட்சி என்ற வகையில் நல்ல விடயங்களை வரவேற்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவரும் நாட்டிற்கு நல்ல விடயமொன்று கிட்டுமாயின் அதனை வரவேற்பது அவசியம்.
அதனால் ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் இந்த பணி பாராட்டுக்குரியது. நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கம், நீதித்துறை ஆகியவற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரப் பரவலாக்கம் அவசியமாகிறது” என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற துறைசார் கண்காணிப்பு சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட இளைஞர் பிரதிநிதிகளை அறிவிக்கும் செயலமர்வு இன்று காலை கொழும்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tagged சஜித்தின் நிபந்தனையற்ற ஆதரவு