சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ந் தேதி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. பிரதமர் மோடி இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகளை நேரில் சென்று பாராட்டினார்.
இந்தநிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று மதியம் திருவனந்தபுரம் வெங்கானூர் பவுர்ணமிக்காவு தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சந்திரயான்-3 வெற்றிக்கு அனைத்து விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியே காரணம். இதற்காக கடந்த 4 ஆண்டுகள் கடினமாக உழைத்தோம்.
ரோவர் லேண்டரில் இருந்து இறங்க சற்று தாமதமானதை தவிரமற்ற பிரச்சினை ஏதும் இல்லை. முதல் 14 நாட்களுக்கு பிறகு நிலவில் இருட்டாக இருக்கும். அதனால் தான் பிரக்யான் ரோவரின் செயல் திறன் 14 நாட்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
எனவே 14 நாட்களுக்கு பிறகு ரோவரின் பணி முடங்கி விடும். அதற்கடுத்த 14 நாட்களில் ரோவரின் செயல்பாடு குறித்து இப்போது உறுதியாக கூற முடியாது.
சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பிரதமர் பெயரிட்டது குறித்து விவாதிக்க வேண்டியது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.