நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் போசனைமிக்க உணவுகளை தயாரித்து அதனை தாய்மார்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று 2023.08.31 ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் குறித்த அலுவலகத்தின் பொது சுகாதார மாதுக்களும் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்களும் இணைந்து சமகால பொருளாதார முகாமைத்துவத்திற்கு ஏற்ற உணவு தயாரிப்பில் ஈடுபட்டதுடன் தாய்மார்களுக்கு அது தொடர்பான விழிப்புணர்வையும் வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.பீ. அப்துல் வாஜித், உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என். எம். இப்ஹாம், பொது சுகாதார மாதுக்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பணிப்பாளர் அவர்கள் உணவு என்பது வெறுமனே பசியை தீர்க்கும் ஒன்றல்ல இது நமது சிந்தனையையும் ஆற்றலையும் தீர்மானிக்கின்ற ஒன்றாகவும் காணப்படுகிறது என்றும் இதில் எமது சிறுவர்கள் குழந்தைகளுக்கு அதிக கரிசனை காட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன் உணவும் மருந்தும் நமது மண்ணில் இருந்தே உற்பத்தியாக வேண்டும் என்கின்ற பாரம்பரிய கோட்பாட்டையும் வலியுறுத்தியிருந்தார்
மேலும் ஒரு தாய் போசனையான உணவை மட்டும் ஊட்டுவதில்லை அத்துடன் அன்பையும் கருணையையும் சேர்த்தே ஊட்டுகிறாள் என்றும் எனவே இவ்வாறான உணவை தயாரிக்கும் போது மிகுந்த அக்கறையுடனும் சிறந்த உள்ளத்துடனும் விருப்பத்துடனும் அதில் ஈடுபட வேண்டும் என்றும் இது ஆரோக்கியம் மேலும் வளருவதற்கு வழிகோலும் என்றும் தெரிவித்திருந்தார்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *