இரண்டு சிறுநீரகங்களையும் சத்திர சிகிச்சையின் போது இழந்த ஹம்தி என்ற சிறுவனின் மரணமும், இலங்கையில் இயங்கி வரும் மருத்துவ மாபிஃயாவும் இன்று ஒரு பேசு பொருளாக மாறியிருக்கிறது.
ஹம்தியின் ஆரோக்கியமான வலது பக்க சிறுநீரகத்தை திருடிய “மாபிஃயா” மருத்துவர்கள், இந்த வலது சிறுநீரகம் பற்றி எவ்வித குறிப்புகளையும் மருத்துவ அறிக்கைகளில் பதிவு செய்வதை திட்டமிட்டு தவிர்த்து வந்துள்ளதை ஹம்தியின் மருத்துவ அறிக்கைகளை பார்க்கும் போது தெளிவாக அறியக் கூடியதாக இருக்கிறது.
குறித்த மருத்துவர்கள் ஒரு தப்புக் கணக்கு போட்டிருந்தார்கள். இரண்டு கிட்னிகளையும் இழந்த ஹம்தி ஜுலை 27ம் திகதி மரணித்தான். அவன் மரணித்ததன் பின்னர், அவனின் பெற்றோர் அழுது வடித்துக் கொண்டு அவனது ஜனாஸாவை அடக்கம் செய்து விடுவார்கள். மருத்துவர்களின் தில்லு முள்ளுகள், சித்து விளையாட்டுக்கள் ஹம்தியின் மண்ணறைக்குள் அப்படியே மறைந்து போகும் என அவர்கள் நினைத்திருந்தார்கள்.
ஆனால் அது அப்படி நடக்கவில்லை.
28ம் திகதி, ஹம்தியின் மரண விசாரணையின் போது, நீதிமன்றத்தின் உதவி இந்த விவகாரத்தில் நாடப்பட வேண்டும் என்றும், மேலதிக விசாரணைகள் தொரடப்பட வேண்டும் என்றும் முடிவு வந்தது.
இதனை அறிந்த லேடி றிஜ்வே மருத்துவமனை நிர்வாகம் அப்படியே ஆடிப்போனது.
29ம் திகதி கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் இதனை ஒரு வழக்காக ஏற்றது. அன்று மாலை 5 மணியளவில் நீதிபதி கொழும்பு பிரதான சவச்சாலைக்கு வந்து ஹம்தியின் உடலத்தை பார்த்து விட்டு சட்ட வைத்திய அதிகாரிக்கு பிரேத பரிசோதனை நடாத்த உத்தரவிட்டார்.
30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரேத பரிசோதனையின் பின்னர் ஹம்தியின் ஜனாஸா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கால் கடுக்க காத்து நின்றோம். செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்து நின்றன. இலங்கையில் போதைப்பொருள் மாபிஃயாவுக்கு அடுத்த நிலையில் இயங்கும் மருத்துவ மாபிஃயாவோடு போராடுவது இலேசான காரியமல்ல என்பதை அந்த கடினமான நகர்வுகள் மிகவும் தெளிவாக புரிய வைத்தன. ஜனாஸாவை பெற்றுக்கொள்வதில் உள்ள சகல வழிகளும் மிகவும் தந்திரமாக மூடப்பட்டன.
மருத்துவமனை நிர்வாகமும் அதனோடு இணைந்த மாபிஃயா கும்பலும், ஹம்தியின் மரணத்திற்கான காரணத்தை அவனது பிரேத பரிசோதனை அறிக்கையில் தமக்கு சாதகமாக எப்படி குறிப்பது என்றும், இந்த கிட்னி திருட்டு மோசடிக் காரர்களை சட்டத்தின் பிடியிலிருந்து எப்படி விடுவிப்பது என்றும் ஒரு “நிழல்” சதியாலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன.
அந்த சதி ஆலோசனை நிறைவு பெறும் வரை அவர்கள் ஹம்தியின் பிரேத பரிசோதனையை தாமதப்படுத்திக் கொண்டு வந்தனர்.
பொரளை பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தருக்கு ஹம்தியின் மருத்துவ அறிக்கைகளை வழங்க பல சாட்டுக்களை கூறி மருத்துவமனை நிர்வாகம் மறுப்புத் தெரிவித்தது.
நானும் அந்த பொலிஸ் அதிகாரியோடு பிரதான சவச்சாலைக்கு சென்றேன். பொலிஸ் அதிகாரிக்கு மருத்துவனை நிர்வாகம் ஹம்தியின் மருத்துவ அறிக்கை மற்றும் அவனது டிஸ்சார்ஜ் பத்திரங்களை வழங்காதது குறித்து பிரதான சவச்சாலை ஊழியர்கள் வியப்படைந்தனர்.
குறித்த பொலிஸ் அதிகாரி மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு மிகவும் அறிமுகமானவர், அதே போல சவச்சாலை நிர்வாகத்தினரோடும் மிகவும் பரிச்சயமானவர். பொரளை பொலிஸ் பிரிவில் இடம்பெறும் மரணங்கள் தொடர்பாக இவரே செயற்பட்டு வருகிறார். அப்படியிருந்தும் இந்த நிலை எமக்கு ஏற்பட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவை மருத்துவமனை நிர்வாகம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அதை மிகவும் இலகுவாக தட்டிக் கழித்துக் கொண்டிருந்தது. நீதிமன்ற உத்தரவைக் கூட உதாசீனம் செய்யக் கூடிய அளவுக்கு இலங்கையில் இந்த மருத்துவ மாபிஃயா சக்தி பெற்றிருக்கிறது. ஒரு குற்றத்தை மறைக்க பல குற்றங்களை செய்ய மருத்துவமனை நிர்வாகம் தயாராகிக் கொண்டிருந்தது. நாங்கள் பலத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தயாரான நிலையில்தான் ஹம்தியின் ஜனாஸா எங்கள் கைகளுக்கு கிடைத்தது.
ஹம்திக்கு நடந்த இந்த கொடுமைக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பிக்கும் போதே நாங்கள் இந்த மருத்துவ மாபிஃயாவிடமிருந்து அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் வரும் என்றே எதிர்பார்த்தோம். எந்த சவால்களுக்கும் எப்படியும் முகம் கொடுப்போம் என்ற மனவுறுதியுடனே இதனை ஆரம்பித்தோம்.
தற்போது இந்த மருத்துவ மாபிஃயா சமூக வலைதளங்களில் தனது தில்லுமுள்ளுகளை நியாயப்படுத்தும் அடிப்படையற்ற செய்திகளை பதிவேற்றி மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக சிங்கள மக்களை இலக்கு வைத்து இந்த மருத்துவ மாபிஃயாக்கள் தமது பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளன. எமது சோனக அல்லக்கைகள் ஒரு சிலரும் இந்த மருத்துவ மாபிஃயாக்களின் பிரசாரத்தை தூக்கிப்பிடித்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. குறித்த சோனக எடுபிடிகள் இந்த பதிவுகளை பகிர்ந்தும் “லைக்”குகள் இட்டும் பரவசப்பட்டு வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல், இந்த மருத்துவ மாபிஃயா ஊடகங்கள் மீதும் தமது அழுத்தத்தை பிரயோகிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த மாபிஃயா கும்பல் சிரச ஊடகத்தை அடிபணிய வைத்திருக்கிறது. ஹம்திக்கு நடந்த அநீதியை முதலில் அம்பலப்படுத்திய சிரச ஊடகம் தற்போது அமைதியடைந்து மௌனித்து இருக்கிறது. ஹம்தி தொடர்பான எந்த செய்திகளையும் சிரச ஊடகம் ஒளிபரப்புவதில்லை என்று முடிவு செய்திருக்கிறது. தப்பியோடியுள்ள மருத்துவரே சிரச ஊடகத்தை ஊமையாக்கி விட்டுள்ள தகவலும் இப்போது வெளியே கசிந்துள்ளது.
உடலுறுப்புகளை திருடி விற்கும் இந்த மருத்துவ மாபிஃயா இன்று முழு உலகையும் ஆக்கிரமித்திருக்கிறது. உலகை ஆட்டிப்படைக்கும் போதைப்பொருள் மாபிஃயாவுக்கு அடுத்த படியாக உடலுறுப்புகளை திருடி விற்கும் இந்த மருத்துவ மாபிஃயா இடம் பிடித்திருப்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று உலகளவில் ஆண்டுக்கு 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கும் தொழில்துறையாக இந்த கிட்னி திருட்டு மருத்துவ மாபிஃயா வளர்ச்சி கண்டுள்ளது.
உலகில் முதலாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொழில் நுட்பம் 1956 இல் அறிமுகமானது.
1985 ஆம் ஆண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர்களான றிஸ்வி ஷரீப் மற்றும் ஷரிப் டீன் ஆகியோரால் சட்ட ரீதியிலான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முதன்முதலில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னரே இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
றிஸ்வி ஷரீப் மற்றும் ஷெரீப்டீன் போன்றவர்களால் நல்லெண்ணத்துடன் தொடங்கப்பட்ட இந்த சிறுநீரக மாற்று சிகிச்சை முறை, மருத்துவ துறையின் மகிமையை கெடுக்கும் பணம் சம்பாதிப்பதை இலக்காகக் கொண்ட பிணம் தின்னி கழுகுகளின் கைகளுக்கு சென்றிருப்பதை வேதனையுடன் குறிப்பிட்டாக வேண்டும்.
ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் புரளும் இந்த கிட்னி வியாபார மாஃபியாவை இலங்கையில் ஒருசில வைத்தியர்களே தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இந்த கிட்னி மாஃபியாவிற்கு சுகாதார துறையின் உயர் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டு இருப்பதான சந்தேகங்கள் வலுப்பெற்று வருகின்றன.
லேடி றிஸ்வே மருத்துவமனையின் பணிப்பாளரின் நடவடிக்கைகள் கூட மோசடி செய்யும் மருத்துவர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இருக்கின்றன. மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அவர், நோயாளிகளின் உரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அவர், மோசடி செய்யும் மருத்துவர்களுக்காக குரல் கொடுப்பவராக செயற்பட்டு வருகிறார்.
ஹம்திக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், குற்றத்தின் சாட்சிகளையும் மறைக்கும் செயற்பாட்டிலும் அவர் இறங்கியிருப்பது முன்னுக்கு பின் முரணான முறையில் வெளியிடும் அவரின் கருத்துகளிலிருந்து தெரிய வருகிறது.
இன்ஷா அல்லாஹ், ஹம்தி என்ற இந்த பாலகனுக்கு குற்றமிழைத்தவர்களையும், அந்த குற்றத்திற்கு துணைபோனவர்களையும் நீதி மன்றில் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு சட்ட ரீதியிலான நகர்வுகள் இடம் பெற்று வருகின்றன.
- அஸீஸ் நிஸாருத்தீன்
01.08.2023
10.15 am
#justiceforhamdi