(க.கிஷாந்தன்)
பொகவந்தாலாவ நகரில் கைது செய்யும் போர்வையில் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் நடத்தியுள்ள தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராகவும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
திடீரென பொகவந்தலாவ நகரில் களமிறங்கிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகளையும் சம்பவ இடத்துக்கு அழைத்தார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் தரப்பில் உள்ள நியாயத்தை அதிகாரிகளுக்கு எடுத்துரைத்த ஜீவன் தொண்டமான், இது விடயத்தில் சில பொலிஸ் அதிகாரிகள் தமது அதிகார எல்லையை மீறும் வகையில் செயற்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
இளைஞரை கைது செய்த பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பில் விசாரித்து அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதே பொலிஸார் பொறுப்பாகும். மாறாக சட்டத்தை கையில் எடுத்து செயற்படுவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது எனவும் உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் ஜீவன் தொண்டமான் இடித்துரைத்தார்.
பொகவந்தலாவ நகரில் அமைந்துள்ள அரச வங்கியொன்றுக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவருக்கும் வங்கி முகாமையாளருக்கும் இடையில் நேற்று முன்தினம் (22) பிற்பகல் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கி முகாமையாளரின் அறிவிப்பை அடுத்து பொகவந்தலாவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த இடத்திற்கு சென்று சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது அங்கு கூடியிருந்தவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். பொலிஸாரும் தான்தோன்றித்தனமாக செயற்பட்டனர் என விமர்சனம் எழுந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.