எதிர்வரும் வார இறுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பிற்கான விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதால், மக்கள் வீடுகளிலேயே தங்கி அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோருவதாக டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் தலைவியும், சுகாதார இராஜாங்க அமைச்சருமான விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.
இந்த திட்டத்தைத் தொடர்ந்து கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கி ஒரு வாரத்திற்கு நுளம்பு குடம்பிகளை கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் டெங்கு ஒழிப்புக்கான அமைச்சர் குழுவொன்றையும், நிபுணர் குழுவொன்றையும் நியமித்ததோடு நிபுணர் குழுவினால் மாகாண மட்டத்தில் 09 உப குழுக்கள் நியமிக்கப்பட்டு நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
டெங்கு நுளம்புகள் அதிகம் பெருகும் பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக வளாகங்கள் மற்றும் கைவிடப்பட்ட காணிகள் என்பவற்றில் பரிசோதனை மேற்கொள்ள விசேட தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு இந்த செயற்திட்டங்கள் மேல்மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய மாகாணங்களுக்குத் தனித்துவமான பிரச்சினைகளை அடையாளங்கண்டு விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஊக்குவிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.
டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல இதனைத் தெரிவித்தார்.