திராவிட மொடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பல்வேறு தருணங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில் திமுக அரசின் திராவிட மொடல் கொள்கையை கடுமையாக சாடியுள்ளார் ஆளுநர் ரவி.
ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்தப் பேட்டியில், “திராவிட மொடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது.
ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. ஸ்டாலின் ஒரு நல்ல மனிதர்.
அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவரிடம் நானும் என்னிடம் அவரும் பரஸ்பரம் மரியாதையாகவே நடந்து கொள்கிறோம். தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது.
ஆனால், ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி எல்லை தாண்டி செயல்படுகிறார் என்று திமுக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யான குற்றச்சாட்டு. அது முழுக்க முழுக்க அபத்தமானது. ஆளுநருக்கு என்று ஒரே ஒரு எல்லை தான் இருக்கிறது.
அந்த எல்லை என்பது அரசியல் சாசனத்தால் வகுக்கப்பட்டது என் கூறியுள்ளார்.