“தோட்டங்களில் குடியிருக்கும் மக்கள் மீதான அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள் நிறுத்தப்பட வேண்டும்.” என நாவலப்பிட்டிய பரனகள தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
இது தொர்பாக மேலும் பின்வருமாறு தெரிவித்தார்.
“பெருந்தோட்ட பகுதிகளில் வாழுகின்ற மக்களின் பிரச்சினைகள் நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. தோட்டங்களினது நிர்வாகம் கடுமையான நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் அமுல்படுத்தி வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். தோட்டங்களில் குடியிருக்கும் மக்கள் மீதான அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
கடந்த இரு தசாப்த காலங்களில், பெருந்தோட்ட பகுதிகளின் நிலைமை மிக வேகமாக மாற்றமடைந்து வருகின்றது. தோட்டங்களில் குடியிருப்பவர்களில் ஒரு சில எண்ணிக்கையானவர்களே தோட்ட தொழிலாளர்களாக உள்ளனர். பெரும்பாலானவர்கள் தோட்டங்களில் குடியிருந்தாலும் அவர்கள் தோட்ட தொழிலாளர்களாக இல்லை. இவ்வாறான நிலையில் தோட்ட நிர்வாகத்திற்கும், தோட்டத்தில் குடியிருப்பவர்களுக்குமிடையில் தொடர்ச்சியான முறுகல் நிலை காணப்பட்டு வருகின்றது. இவை பல தோட்டங்களில் மோதல்களாக, கலவரங்களாக கடந்த காலத்தில் ஏற்பட்டிருந்தது.
இன்று நாவலப்பிட்டிய பரனகள தோட்டத்தில் குடியிருக்கும், தோட்டத்தில் வேலை செய்யாத குடும்பங்களை லயன் குடியிருப்புகளில் இருந்து அகற்றுவோம் என தோட்ட நிர்வாகம் அச்சுறுத்தி இருக்கின்றது. அங்கே குடியிருப்பவர்களிடம் அடாவடித்தனமாக நடந்துகொண்டிருக்கின்றனர். அதன் பின் தமது அதிகாரத்தை பயன்படுத்தி போலீஸ் முறைப்பாடு ஊடாக ஓய்வு பெற்ற தொழிலாளி ஒருவரை கைது செய்திருக்கின்றனர். இவை மக்களிடையில் பாரிய அச்சுறுத்தலை, தமது எதிர்காலம் தொடர்பான பாதுகாப்பற்ற நிலையை தோற்றுவித்திருக்கிறது.
தோட்டங்களில் குடியிருக்கும் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தோட்ட நிர்வாகங்களின் அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்தப்பட வேண்டும். அது தொடர்பாக அரசாங்கம் உரிய நடவக்கை எடுக்க வேண்டும்.”