• கடந்த கால தவறுகள் மீண்டும் நிகழாத வகையில் சட்டதிட்டங்களையும் பின்னணியையும் ஏற்படுத்தி, நாடு கட்டியெழுப்பப்படும்.

• இலங்கை, பொருளாதார தொங்கு பாலத்தை கடக்க தான் செயல்பட்டதை இன்று சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

• தற்போதைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பலன் மக்களுக்கு விரைவில் கிடைக்கும்.

• சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு நிதானமாகச் செயல்பட்ட மக்களுக்கு நன்றிகள் – பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி தெரிவிப்பு

“நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

கடந்த காலத்தை விமர்சிப்பது தனது பணியல்ல என்றும், நாட்டை கட்டியெழுப்புவதே தனது பணி எனவும் வலியுறுத்திய ஜனாதிபதி, கடந்த கால தவறுகள் மீண்டும் ஏற்படாத வகையில் சட்டதிட்டங்கள் மற்றும் பின்னணியை வகுத்து, எதிர்காலத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்று (22) காலை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றாமல், ராஜபக்ஷவினரைக் காப்பாற்றுவதே தனது நோக்கம் என்று பலர் குற்றஞ்சாட்டினாலும், இலங்கை கடினமான தொங்கு பாலத்தைக் கடக்க தான் பணியாற்றியதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் ஜனாதபதி தெரிவித்தார்.

தான் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்ற நேசத்துக்குரிய நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக மேலும் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த கால அனுபவங்கள் பலவும் அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தியதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை பெற்றுக்கொள்வது தாய்நாட்டை மீண்டும் உயர்த்துவதற்கான சந்தர்ப்பம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அதன் ஊடாக நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப புதிய பாதை திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பணவீக்கம் காரணமாக முழு சமூகமும் எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள் தொடர்பில் தமக்கு சரியான புரிதல் இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த சிரமங்கள் தற்காலிகமானவை என்றும், தற்போதைய முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்புக்கான பலன்களை மக்கள் விரைவில் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து சிரமங்களையும் அழுத்தங்களையும் தாங்கிய நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் முழுமையான உரை பின்வருமாறு:

“சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை எங்களால் பெற முடிந்தது என்பதை இந்த கௌரவ சபைக்கு உத்தியோகபூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன். அரச நிதியின் அனைத்து அதிகாரங்களும் அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. எனவே, இன்று IMF உடன்படிக்கை ஆவணத்தை சமர்ப்பித்து, இந்த பாராளுமன்றத்தில் நாம் பெற்றுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதி பற்றிய முதல் உத்தியோகபூர்வ அறிக்கையை இந்த சபையில் சமர்ப்பிக்கிறேன்.

பற்றி எரிந்துகொண்டிருந்த ஒரு நாட்டையே ஜூலை 9 ஆம் திகதி நான் பொறுப்பேற்றேன். குழப்பத்தில் இருந்த நாடு. நாளைய தினம் குறித்து கடுகளவும் நம்பிக்கை இல்லாதிருந்த நாடு. வங்குரோத்தடைந்துவிட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த நாடு. பணவீக்கம் 73 சதவீதமாக உயர்ந்திருந்த நாடு. எரிபொருள், எரிவாயு வரிசையில் மக்கள் பல நாட்கள் அவதிப்பட்ட நாடு. பாடசாலைகள் மூடப்பட்ட நாடு. ஒரு நாளைக்கு பத்து – பன்னிரெண்டு மணி நேரம் மின்சாரம் தடைபட்டிருந்த நாடு.

விவசாயிகளுக்கு உரம் கிடைக்காமலிருந்த நாடு. சட்டம் ஒழுங்கு பின்பற்றப்படாத நாடு. அரச அலுவலகங்கள் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டு, வெளியாட்கள் அதில் குடியேறியிருந்த நாடு. ஒவ்வொரு இடத்திலும் குண்டர்கள் தாக்குதல் நடத்திய நாடு. எதிர்தரப்பினரின் வீடுகளை எரிக்கும் நாடு. நெடுஞ்சாலையில் மக்கள் கொல்லப்பட்ட நாடு.

இவ்வாறான பின்னணியில் பொறுப்பை ஏற்க எவரும் விரும்பவில்லை. சிலர் பின்வாங்கினார்கள். சிலர் ஜாதகம் பார்க்க நேரம் கேட்டார்கள். சிலர் நழுவிச் சென்றனர். சிலர் பயந்தார்கள். அவர்களில் யாரும் பொறுப்பை ஏற்க முன்வராத நிலையில் என்னிடம் பொறுப்பேற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

எந்த நிபந்தனையுமின்றி இந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். பாராளுமன்றத்தில் எனக்கு அதிகாரம் இருக்கவில்லை. எனக்கென்று எம்.பிகள் யாரும் இருக்கவில்லை. ஆனால் இவை எதுவும் இல்லாவிட்டாலும், எனக்கு ஒரே ஒரு பலம் இருந்தது. நான் பிறந்து, வளர்ந்து, படித்த எனது நேசத்துக்குரிய நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே இருந்தது. அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் எனக்கு பல கடந்தகால அனுபவங்கள் இருந்தன.

2001இல், நாட்டின் பொருளாதாரம் மறைப் பெறுமானமாக வீழ்ச்சியடைந்திருந்தது. ஆனால் ஆட்சிப் பொறுப்பை ஏற்று 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு வர என்னால் முடிந்தது. அதுமட்டுமல்லாமல், டோக்கியோ உதவி மாநாட்டின் மூலம் 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவியை என்னால் பெற முடிந்தது.

துரதிர்ஷ்டவசமாக, அதன் பின்னர் ஆட்சியைப் பொறுப்பேற்றவர்கள் அந்தப் பணத்தை சரியாகப் பயன்படுத்தவில்லை. 2015இல் நான் பொருளாதாரத்தை பொறுப்பேற்ற போது அது பலவீனமான நிலையில் இருந்தது. ஆனால், 2018இல், பட்ஜெட்டில் முதன்மையான மேலதிகத்தை எட்ட முடிந்தது. பல்வேறு சலுகைகளை வழங்கியும் சுமார் 106% சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம்.

இந்த கடுமையான சவாலை ஏற்கும்போது, கடந்த கால அனுபவங்கள் மூலம் பெற்ற நம்பிக்கை மட்டுமே எனக்கு இருந்தது. நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது என்ற எண்ணத்தில் சவாலை ஏற்றுக்கொண்டேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையுடன், இளைஞர்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப எங்களுக்கு ஒரு பாதை திறக்கப்பட்டுள்ளது. மீண்டும் எமது தாய்நாட்டை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இந்த கடன் வசதியின் கீழ், 4 ஆண்டுகளில் சுமார் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியைப் பெறுவோம். அதன்முதல் தவணையின் கீழ் 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கிறது. உலக வங்கி மற்றும் ஏனைய கடன் வழங்குபவர்களிடமிருந்து மேலும் 7 பில்லியன் டொலர் துரித கடன் உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

IMF நீடிக்கப்பட்ட கடன் வசதியை நெருப்பு வட்டியுடன் கூடிய மற்றொரு கடன் என்று சிலர் விபரிக்கிறார்கள். இந்தப் பணத்தில் நாட்டின் முழுக் கடனையும் அடைக்க முடியாது என்று கூக்குரலிடுபவர்களும்இருக்கிறார்கள். இத்தகைய கருத்துக்கள் அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. அல்லது அப்பாவி மக்களை பொய் சொல்லி ஏமாற்றி அரசியல் ஆதாயங்களை பெற்றுக்கொள்ள அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

IMF நீடிக்கப்பட்ட கடன் என்பது வீழ்ந்த நாட்டை மீட்டெடுக்க வழங்கப்படும் வசதியாகும். அதற்கான தளமும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் மீண்டும் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இலங்கை இனி வங்குரோத்தடைந்த நாடாக இருக்காது என்பதற்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது. எமது உள்நாட்டு வங்கிகளுக்கு சர்வதேசத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்கள் எங்கள் கடன் பத்திரங்களை மதிக்கின்றன.

ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து மிகக் குறைந்த வட்டியில் கடன் உதவி பெறுவதற்கான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இலங்கை மீது நம்பிக்கை வைப்பர். பரந்த அளவிலான சர்வதேச வாய்ப்புகளுக்கான கதவுகள் எங்களுக்காக திறக்கப்படும். வலுவான புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அடித்தளம் தயாராகி வருகிறது.

அது மட்டுமின்றி, இந்த உடன்படிக்கையின் மூலம் நமது நாட்டின் நிதி ஒழுங்குச் சட்டமாக்கப்படும். ஊழலைத் தடுக்க புதிய கடுமையான சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் இலங்கையில் இதுவரை இல்லாத புதிய நிதிக் கலாசாரம் மற்றும் ஊழல் அற்ற சூழல் உருவாக்கப்படும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

எமது நாட்டைப் பற்றி சர்வதேச நாணய நிதியம் முடிவெடுக்கும் முன்னரே நாட்டை முழுமையாக முடக்க சிலர் முயற்சித்தனர். இடைவிடா வேலை நிறுத்தத்தை முன்னெடுத்து, பொருளாதாரத்தை சீரழித்து நாட்டை அராஜகமாக்க திட்டமிட்டனர். நாசவேலை மூலம் IMFஒத்துழைப்பை தடுக்கலாம் என்று நினைத்தனர். சில அரசியல் குழுக்கள், சில தொழிற்சங்கங்கள், சில ஊடகங்கள் இதற்காக கடினமாக உழைத்தன. நாடு ஸ்திர நிலையில் இல்லை என்பதால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காது என்றும் கூறினர்.

உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படாததால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காது என்று கூறினர். இப்படியான பொய்களைப் பரப்பி நாட்டு மக்களை வீதிக்கு இறக்க முயற்சித்தனர்.

எனினும், இந்த நாசகார செயற்பாடுகளை பெரும்பான்மையான மக்கள் ஆதரிக்கவில்லை, தனிப்பட்ட அரசியல் அதிகார நோக்கங்களுக்காக நாட்டின் முன்னேற்றத்திற்கு குந்தகம் விளைவிக்க பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை, அவர்கள் நாட்டுக்காக பொறுப்புணர்வோடு செயற்பட்டனர். பல்வேறு சிரமங்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியில், அவை அனைத்தையும் சகித்துக்கொண்டு, துன்ப, துயரங்களைத் தாங்கிக் கொண்டு நிதானமாகவும், பொறுமையாகவும் பெரும்பான்மையான மக்கள் செயற்பட்டனர். சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கு அவர்களின் அர்ப்பணிப்பு பெரும் பலமாக இருந்தது. எனவே முதலில் இந்நாட்டு மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விடயத்தில் எங்கள் அதிகாரிகள் இரவு பகலாக கடுமையாக உழைத்தனர். சிலர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டனர். அமைச்சர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர். இச்சபையின் உறுப்பினர்கள் பலர் அதற்கு ஆதரவளித்தனர். சிலர் பகிரங்கமாகவும் பலர் இரகசியமாகவும் ஆதரவளித்தனர். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்த நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெறுவதற்கு எங்களின் முக்கிய கடன் வழங்குநர்கள் எங்களுக்கு ஆதரவளித்தனர். வெளிநாடுகளும் சர்வதேச அமைப்புகளும் எங்களுக்கு ஆதரவளித்தன. வெளிநாட்டு அரச தலைவர்கள், அமைச்சர்கள், சர்வதேச அமைப்புகளின் அதிகாரிகள், பிரதிநிதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், அதிகாரிகள் என பலரும் எங்களுக்கு உதவினார்கள். அவர்கள் அனைவருக்கும் இலங்கையின் மரியாதைக்குரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

நாம் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறோம், மேலும் பல பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இங்குதான் நமது வெற்றிக்கான அடிப்படை இருக்கிறது. இவற்றில் சில மறுசீரமைப்புகளை, 2022 இடைக்கால வரவுசெலவுத்திட்டம் மற்றும் 2023 வரவுசெலவுத்திட்டங்களில் முன்மொழிந்து ஏற்கனவே செயல்படுத்தி வருகிறோம். நாங்கள் இன்னும் பல மறுசீரமைப்புகளை அறிமுகப்படுத்துவோம். அவற்றுள், சில முக்கியமான விடயங்களை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

மேலும், நாம் தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றதும், எதிர்காலத்தில் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ள மறுசீரமைப்பு செயற்பாடுகள் குறித்தும் இந்த கௌரவ சபைக்கு தெரிவிக்க எதிர்பார்க்கின்றேன்.

அரச வருமானத்தை அதிகரிக்கும் திட்டம்
.
* 2025 ஆம் ஆண்டுக்குள் முதன்மை பற்றாக்குறையை மொத்தத் தேசிய உற்பத்தியில் 2.3% ஆக மாற்றுவதே எமது இலக்காகும்.

* இலங்கை அரசாங்கத்தின் வருமானம் தற்போது மொத்தத் தேசிய உற்பத்தியில் 8.3% ஆகும். உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது அரசின் வருமானம் மிகக் குறைந்த அளவில் உள்ளது. இதனால்தான் 2026 ஆம் ஆண்டுக்குள் அரச வருமானத்தை மொத்தத் தேசிய உற்பத்தியில் 15% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

* துறைவாரி வரிச் சலுகைகள் இல்லாமல் கூட்டிணைக்கப்பட்ட வருமான வரி விகிதம் இப்போது 30% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

* வட் வரியை 8% சதவீதத்தில் இருந்து 15% சதவீதமாக உயர்த்த நாம் நடவடிக்கை எடுத்தோம். வட் வரிக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்குகளை படிப்படியாக குறைக்கவும், வட் வரி திரும்ப செலுத்துவதை துரிதப்படுத்தவும், எஸ்-வட் முறையை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* 2025 இல், குறைந்தபட்ச வரி விலக்குடன், சொத்து வரி முறைக்குப் பதிலாக செல்வ வரியொன்றை விதிக்கவும், பரிசு மற்றும் பரம்பரை சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரச செலவு முகாமைத்துவம்
.
* முறையான செலவு முகாமைத்துவம் மூலம் அரச செலவினங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பணவீக்கத்திற்கு ஏற்ப, ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களை சமநிலை செய்யும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் முதன்மை வரவு செலவுத்திட்டக் கையிருப்பு வரம்பிற்குள் இந்த மாற்றங்கள் செய்யப்படும்.

அரச நிறுவனங்கள் மற்றும் வலுசக்தி விலை நிர்ணயம்

* எரிபொருளின் விலை நிர்ணயம் செய்வதை, அரசியல் அதிகார மட்டத்தில் இருந்து முற்றாக நீக்கப்படும். 2018 விலை சூத்திரத்தின் படியே எரிபொருள் விலை தீர்மானிக்கப்படுகிறது.

* எதிர்கால செலவு மதிப்பீட்டை கணக்கில் கொண்டு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார விலையை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாரியளவில் நஷ்டத்தை சந்தித்து வரும் வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஸ்ரீலங்கா விமான சேவை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை போன்ற நிறுவனங்களின் இருப்பு நிலைகள் மறுசீரமைக்கப்படும். காலாவதியான இறையாண்மை பிணைகளின் பேரில் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன் தொகையை இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய கடன் தொகையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

விலை நிலைத் தன்மை மற்றும் நிதிக் கொள்கை

• பணவீக்க விகிதத்தை மீண்டும் 4% மற்றும் 6%க்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை பணவீக்கத்தை கணிசமான அளவில் குறைக்க முடிந்துள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், பணவீக்க விகிதத்தை ஒற்றை இலக்க மதிப்பிற்குக் குறைப்பது எங்கள் இலக்கு.

* இந்த திட்டங்களை செயல்படுத்தும் போது, பணம் அச்சிடுவது படிப்படியாக குறைந்துவிடும். இதனால் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுசெய்ய, கடன் பெற்றுக்கொள்ளாமல் வருமானத்தை ஈட்டிக்கொள்ள திறைசேரிக்கு நேரிடும்.

* தற்போதுள்ள அந்நியச் செலாவணி, கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் படிப்படியாக நீக்கப்பட்டு, அந்நியச் செலாவணி சந்தையின் செயல்பாடுகள், சந்தை அளவுகோல்களின் அடிப்படையில் தீர்மானிக்க அனுமதிக்கப்படும்.

* தீர்மானிக்கப்பட்ட இலக்குகளின்படி, மத்திய வங்கி வெளிநாட்டு கையிருப்புகளை அதிகரிக்க வெளிநாட்டு நாணயம் கொள்வனவு செய்யப்படும்.

நல்லாட்சி

உள்ளூர் நிபுணர்களின் கருத்துக்களை உள்வாங்கி, அரசாங்கத்தின் பலவீனங்கள் குறித்த IMF அறிக்கை ஒன்றைத் தயாரிக்கிறது. ஊழலைத் தடுப்பது தொடர்பாக அரசு மற்றும் நிறுவன கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய இதனால் வாய்ப்பு ஏற்படும்.

* ஐ.நா சாசனத்தின் பிரகாரம் ஊழல் எதிர்ப்பு சட்டம் தயாரிக்கப்படும்.

* இழந்த சொத்துக்களை மீட்பதற்கான ஏற்பாடுகள் 2024 ஆண்டு மார்ச் மாத்ததிற்குள் சட்டக் கட்டமைப்பில் சேர்க்க எதிர்பார்க்கிறோம்.

* வலுவான நிதிக் கொள்கைகளின் அடிப்படையில் புதிய அரச நிதி முகாமைத்துவச் சட்டம் உருவாக்கப்படும்.

* சலுகை வரி அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி பெற்ற நபர்கள், வரிச்சலுகை, வரித் தீர்வைப் பெறும் நிறுவனங்களின் பட்டியல் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பகிரங்கப்படுத்தப்படும். பாரியளவிலான பொது கொள்முதல் ஒப்பந்தங்களின் விவரங்களும் பகிரங்கப்படுத்தப்படும்.

வளர்ச்சி

* சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புடைய திட்டங்களிலுள்ள சீர்திருத்தங்கள் மூலம் நடுத்தர மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் திட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் வர்த்தக சீர்திருத்தங்கள் தொடர்பான செயற்பாடுகள், பெண்களின் தொழிலாளர் பங்கேற்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், திறன் மேம்பாடு, எரிசக்தி துறை மறுசீரமைப்பு ஊடாக செயல்திறனின்மையையும் செலவினங்களையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பிலும் இங்கு கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

எதிர்கால நடவடிக்கை

* IMF திட்டத்தைத்திற்கு அப்பால் சென்ற, பல் பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம். பொருளாதாரத்தைத் திறப்பதன் மூலமும், டிஜிட்டல் மயமாக்குவதன் மூலமும் நிலையான மறுமலர்ச்சியை அடைவதும், நடுத்தர மற்றும் நீண்ட கால உயர் பொருளாதார வளர்ச்சியை அடைவதும் இதன் நோக்கமாகும்.

* அதே நேரத்தில், இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும். நாங்கள் இதுவரை கடைப்பிடித்து வந்த அதே நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களுடன் திறந்த மற்றும் வெளிப்படைத் தன்மையுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம்.

* கடனைத் திருப்பிச் செலுத்துதல் தொடர்பில் ஏற்படுத்திக்கொண்ட விதிமுறைகள் குறித்து இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்னர், அனைத்து இருதரப்புக் கடன் வழங்குநர்கள் அதைப் பற்றி தெரிந்துகொள்ளக் கூடிய வகையில் திறந்த முறையொன்றை பின்பற்றுகிறோம். ஏனைய வெளிநாட்டு கடன் வழங்குநர்களின் விடயத்திலும் இதே நடைமுறை பின்பற்றப்படும். அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் நியாயமான முறையில் மறுசீரமைப்பை மேற்கொள்வது எமது எதிர்பார்ப்பாகும்.

* எமது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கு ஒரு பகிரங்க கடிதத்தை அனுப்பியதன் மூலம் நான் தெரிவித்தது போல், எந்தவொரு வழங்குநர்களுக்கும் கூடுதல் கரிசனை செலுத்துவதில்லை. அவர்கள் அனைவரையும் சமமாக நடத்துகின்றோம். நாங்கள் இதுவரை அவர்கள் அனைவருடனும் வெளிப்படையாகவும் நட்பாகவும் பணியாற்றுவோம். எதிர்காலத்திலும் அவ்வாறே தொடர்ந்து பணியாற்றுவோம்.

எங்கள் கடன் நிலை குறித்து தொடர்ந்து அறிக்கைகள் வெளியிடப்படும். நாட்டின் கடன் பற்றி எந்த தகவலும் மறைக்கப்பட மாட்டாது.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

நாங்கள் கடினமான காலத்தைக் கடந்து வருகிறோம், வரிச்சுமையால் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பதை நாம் அறிகின்றோம். பணவீக்கத்தால் ஒட்டுமொத்த சமுகமும் பாதிக்கப்பட்டுள்ளதையும் நாம் அறிவோம். ஆனால் இந்த நேரத்தில் நாம் தற்போது செயல்படுத்தி வரும் கொள்கைகளில் இருந்து விலகிச் செல்ல முடியாது. நாம் எதிர்கொள்ளும் கசப்பான உண்மை இதுவாகும்.

ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எங்கள் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய நாங்களும் சர்வதேச நாணய நிதியமும் நடவடிக்கை எடுப்போம். முதல் பரிசீலனை வரும் ஜூன் மாதம் நடைபெறும். தற்போதைய வரி முறையை திருத்துவது குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட முன்மொழிவுகளை திறைசேரி தயாரித்து வருகிறது. மேலும், பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் இது தொடர்பான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர். அவர்கள் அனைவருடனும் கலந்துரையாட நாம் எதிர்பார்க்கின்றோம். அதன் பின்னரே பொதுவான உடன்பாட்டை நாம் எட்ட முடியும்.

ஜூன் மாத மதிப்பாய்வின் போது இந்த வரி திருத்தங்களை எங்கள் திட்டத்தில் சேர்க்க IMF உடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அதுமட்டுமல்லாமல், காலத்திற்கேற்ப ஏனைய கொள்கை ரீதியிலான திருத்தங்கள் குறித்தும் நாம் ஆலோசிப்போம்.

இவை உணர்ச்சிகளாலும் போராட்டங்களாலும் தீர்க்கப்படக்கூடியவை அல்ல. இப்பிரச்சினைகள் விழிப்புணர்வோடு, அக்கறையோடும், புத்திசாலித்தனத்துடன் தீர்க்கப்பட வேண்டும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,
நாம் கடினமான காலங்களை கடந்து வருகிறோம். ஆனால் எங்களின் சிரமங்களும், துன்பங்களும் தற்காலிகமானவை. தற்போதைய முயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் பலனை விரைவில் நாம் பெறுவோம். நாளை நாட்டைக் கையேற்கும் இளைஞர்களுக்காக, நமது எதிர்கால சந்ததியினருக்காக இந்த அர்ப்பணிப்பை நாம் செய்ய வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தின்படி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு முறையான நிதி ஒழுக்கத்துடன் பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்தினால், நாட்டின் எதிர்காலத்துக்கு வலுவான பொருளாதார அடித்தளம் உருவாகும். நாம் இந்தப் பாதையை விட்டு விலகினால், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்ததைவிட மோசமான நிலைக்கு நாடு தள்ளப்படும்.

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் மீதான பாராளுமன்ற விவாதத்திற்கான திகதியை மார்ச் மூன்றாவது வாரத்தில் நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன்போது உங்கள் கருத்துக்களையும் உங்கள் அனைவரின் ஆதரவு தருமாறு கௌரவ சபையில் கேட்டுக்கொள்கிறோம்.

மற்றுமொரு முக்கியமான விடயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். IMF உடன்படிக்கையில் மாத்திரம் நாங்கள் திருப்தி அடைய முடியாது. இது பயணத்தின் முடிவு அல்ல. இது மற்றொரு நீண்ட பயணத்தின் ஆரம்பம் ஆகும். இப்போது நாம் நமது முயற்சியுடன் அந்த வழியில் செல்ல வேண்டும்.

நாங்கள் நமது கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடனை மறுசீரமைக்க வேண்டும். அத்துடன் நாட்டின் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும். வெளிநாட்டு வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் வழிகளை உருவாக்க வேண்டும்.

உலக சந்தையில் மட்டுமின்றி நமது பிராந்திய சந்தையிலும் நமது பங்கை விஸ்தரிக்க வேண்டும். பாரிய பொருளாதார சீர்திருத்த செயல்முறையை அச்சமின்றி, தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

இவை அனைத்தும் எளிதான இலக்குகள் அல்ல. ஆனால் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் இந்தப் பயணத்தைத் தொடர வேண்டும். இது கடினமானதொரு பயணம். அந்த கடினமான பயணத்தில் நாம் கவனமாக பயணிக்க வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது முதன்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும். முதலாவதாக, இரண்டாவது, மூன்றாவதாக, நாட்டைக் கட்டியெழுப்புவது மட்டுமே எங்களின் இலக்கு. அப்படிச் சிந்தித்தால் இந்தப் பாதையில் வேகமாகவும் வெற்றிகரமாகவும் பயணிக்கலாம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

IMF உடன் நாங்கள் செய்த திட்டத்தை நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்க வேண்டும். ஆனால் நமது பலம் மற்றும் உறுதியைப் பொறுத்து மூன்றிலிருந்து மூன்றரை வருடங்களில் அதனை செய்து முடிக்கலாம். நாம் அதற்கு முயற்சிக்கலாம். இதற்காக கடினமாக உழைப்போம்.

இங்கே நாம் குறிப்பிட்ட சில விடயங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். முதலாவதாக, சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ள மக்களுக்கு வலுவான சமூகப் பாதுகாப்பு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இரண்டாவதாக, ரூபாயை வலுப்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் முறையான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

மூன்றாவதாக, ஊழலுக்கு எதிரான சட்டங்களை உடனடியாக இயற்றி செயல்படுத்த வேண்டும். நீதியமைச்சர் இதற்கான சட்டமூலத்தை விரைவில் சமர்ப்பிப்பார்.

நான்காவதாக, சமூகத்தில் ஏற்படுத்த வேண்டிய ஏனைய கட்டமைப்பு சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவற்றைக் கண்டறிந்து சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,
டி.எஸ்.சேனநாயக்க பிரதமராக இருந்த காலத்தில் எமது நாடு வெளிநாட்டு கடன்கள் எதுவும் பெறவில்லை. பிற்காலத்தில் நம் நாட்டின் வருமானத்தில் செலவுகளை செய்யாமல், வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கி நாட்டின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு பாரம்பரியம் உருவானது.

அந்த பாரம்பரியம், புற்று நோயாக மாறியதால் இன்று நாம் அனைவரும் அவதிப்பட்டு வருகிறோம். நாம் எல்லா நேரத்திலும் கடன் வாங்க முடியாது. கடன் பெறாத தேசமாக மாற நாம் பாடுபட வேண்டும். அதற்காகவே, இந்த இக்கட்டான காலத்திலிருந்து மீள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் இதுவரை நாம் எடுத்துள்ள அனைத்து கடன்களையும் நாம் செலுத்தி முடிக்க வேண்டும். இந்தப் பாதையில் நாம் சரியாகத் தொடர்ந்தால், அந்த நிலையை அடைய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அந்தக் கடனைச் செலுத்திய பின்னர், நாட்டின் செலவினங்களைச் சமாளிக்கும் வருமானத்தை உருவாக்கும் வலிமையைப் பெற வேண்டும். முயன்றால் அதனை நம்மால் செய்ய முடியும். அந்த வழியை நாம் பின்பற்றினால், சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2048 இல் நம் நாட்டை உலகில் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்ற முடியும்.

இங்கு இன்னுமொரு விடயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். தேரவாத பௌத்த நாடுகள் எப்போதும் பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் உள்ளதாக சமீபத்தில், ஒரு கருத்து வெளியிடப்பட்டது.

இப்போது தாய்லாந்து இந்த கருத்தை உடைக்க போராடுகிறது. உலகின் தேரவாத மையமாகக் கருதப்படும் நாமும் அந்தக் கருத்தை தகர்த்தெறிய பாடுபட வேண்டும். ஒரு தாயின் பிள்ளைகளாகிய நாம் ஒருமனதாக முயற்சி செய்தால் அந்தக் கருத்தை உடைக்க முடியும். உலகின் பொருளாதார மையமாக இலங்கையை மீண்டும் பிரபலமாக்க முடியும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,
நான் முதலில், பிரதமராக பதவியேற்றபோது, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கோரினேன். ஆனால் எனக்கு அந்த ஆதரவு கிடைக்கவில்லை. அதன் பின்னர் நான் ஜனாதிபதியாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதும், எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரினேன். ஆனால் கிடைக்கவில்லை. வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் கேட்டேன். எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.

தற்போதைய பாராளுமன்ற அமர்வின் தொடக்கத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கேட்டேன். ஆனால் எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.

அந்த சந்தர்ப்பங்களில், அவர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி ஆதரவளிக்க மறுத்துவிட்டனர். எனது நியமனம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றார்கள். தேசிய பட்டியலிலிருந்து பிரதமரை நியமிக்க முடியாது எனக் கூறினார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதல்ல, ராஜபக்ஷாக்களைக் காப்பாற்றுவதே எனது நோக்கம் என்றார்கள். கடினமான தடையை கடக்கப்போவது இலங்கை அன்னை அல்ல நாமல் ராஜபக்ஷ தான் என்றார்கள்.

ஆனால், இலங்கை அன்னையை பொருளாதார தொங்கு பாலத்தைக் கடக்கச் செய்ய நான் பாடுபட்டுள்ளதை சர்வதேச சமூகம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

எதிர் தரப்பு குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை. கடந்த காலத்தை விமர்சிப்பது என் வேலையல்ல. எதிர்காலத்தை உருவாக்குவதே எனது பணி. கடந்த கால தவறுகள் மீண்டும் நிகழாத வகையில் சட்டங்களையும் விதிகளையும் மற்றும் பின்னணியையும் ஏற்படுத்தி, எதிர்காலத்தை உருவாக்கவே முயற்சிக்கின்றேன். இதற்காக அர்ப்பணிப்பேன். செயற்படுவேன்.

இந்த நாட்டை கட்டியெழுப்பும் பணிகளில் இணைந்து கொள்ளுமாறு இன்றும் எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். உங்களுடன் நான் வாதிடவில்லை. என்னை விமர்சித்தபோது அதற்கு பதிலளிக்க முயற்சிக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவை என்பதால் அப்படிச் செய்யவில்லை. உங்கள் அரசியல் கருத்துக்களை ஒதுக்கி வைக்கவும். உங்கள் அதிகாரம் குறித்து சிந்திக்கும் முன், நாட்டைப் பலப்படுத்துவது பற்றி சிந்தியுங்கள். ஏனைய அரசியல் கருத்துக்களில் சம்பிரதாயமான முறையில் செயற்படுங்கள். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சியில், நிலையான அரசியல் கட்டமைப்பிலிருந்து வெளியே வாருங்கள். பொருளாதாரத்தை உயர்த்த இந்த முயற்சிக்கு ஆதரவு தாருங்கள். ஏனைய விடயங்களின் போது நாம் எதிரணியில் நிற்கலாம். ஆனால் இந்தப் பணிகளின் போது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மீண்டும் அந்தக் கோரிக்கையை வைக்கிறேன். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப IMF உடன்படிக்கையை செயல்படுத்த தற்போதேனும் உங்கள் ஆதரவை வழங்கவும். இந்தப் பணியில் அனைவரும் கைகோர்ப்போம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *